பேரிகை அருகே, கத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரிடம் ரூ.2¼ லட்சம், செல்போன் பறிப்பு 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
பேரிகை அருகே கத்தியை காட்டி மிரட்டி பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளரிடம் ரூ.2¼ லட்சம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பேரிகை வெங்கடேஷ்புரம் பக்கமுள்ள எனேக்கபீரனப்பள்ளியை சேர்ந்தவர் பரமேஷ் (வயது 25). இவர், பேரிகை அருகே புக்கசாகரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மேலாளராக கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தினமும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வசூலாகும் பணத்தை, காமன்தொட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்துவது வழக்கம். அதே போல், 2 நாட்கள் வசூல் ஆன தொகை ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 270-ஐ எடுத்துக்கொண்டு பரமேஷ், மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் மாலை காமன்தொட்டியில் உள்ள வங்கிக்கு சென்று கொண்டிருந்தார்.
பணம் பறிப்பு
புக்கசாகரம்-காமன்தொட்டி சாலையில் சுண்டட்டி குட்டை என்ற இடத்தில் சென்ற போது, மற்றொரு மோட்டார்சைக்கிளில் 30 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் பரமேசை பின்தொடர்ந்து வந்தனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த நபர்கள் பரமேஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.
மேலும் பரமேசை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 270 மற்றும் செல்போன் ஆகியவற்றை அந்த நபர்கள் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஷ், இதுகுறித்து பேரிகை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பணம் பறித்ததாக புகார் கூறிய பரமேஷ், கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பண முறைகேடு செய்ததாக வேலையில் இருந்து நீக்கப்பட்டு, பிறகு மன்னிப்பு கேட்டு மீண்டும் வேலைக்கு வந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதாக தெரிகிறது. இதனால் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story