நாமக்கல் மாவட்டத்தில் கலந்தாய்வு மூலம் 275 போலீசாருக்கு இடமாறுதல்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று கலந்தாய்வு மூலம் 275 போலீசாருக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டது.
நாமக்கல்:
கலந்தாய்வு
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலுார், திருச்செங்கோடு என 4 போலீஸ் உட்கோட்டங்கள் உள்ளன. இவற்றில் 27 சட்டம் ஒழுங்கு, 6 போக்குவரத்து, 4 மகளிர் என மொத்தம் 37 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 800 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை இடமாற்றம் செய்வதற்கான கலந்தாய்வு நேற்று நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமை தாங்கி, கலந்தாய்வை தொடங்கி வைத்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சுஜாதா, செல்ல பாண்டியன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முன்னிலையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இந்த கலந்தாய்வில் ஏற்கனவே பணியாற்றிய போலீஸ் நிலையங்களை குறிப்பிடக்கூடாது. ஒரே உட்கோட்டத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அந்த உட்கோட்டத்துக்கு செல்லக்கூடாது என்ற விதிமுறைக்கு உட்பட்டு, இடம் மாறி செல்ல விருப்பம் உள்ள போலீசார், தாங்கள் செல்ல விரும்பும் 3 போலீஸ் நிலையங்களை குறிப்பிட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
275 போலீசார் இடமாற்றம்
இந்தநிலையில் கலந்தாய்வில் முன்னுரிமை அடிப்படையில் அழைக்கப்பட்டு, தாங்கள் விரும்பிய போலீஸ் நிலையங்களுக்கு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் விருப்பப்பட்ட இடம் காலியாக இல்லாத பட்சத்தில், காலியாக உள்ள போலீஸ் நிலையங்களை கேட்டு பெற்று, இடம் மாறி சென்றனர்.
மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 275 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்பு அதிகாரிகள் விருப்பத்துக்கு ஏற்ப இடமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விரும்பிய போலீஸ் நிலையங்களுக்கு செல்லும் வகையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
=====
Related Tags :
Next Story