வழக்குகளில் சமரச தீர்வு காண மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 21 July 2021 12:50 AM IST (Updated: 21 July 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

வழக்குகளில் சமரச தீர்வு காண மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள் அணுகலாம் என்று மாவட்ட நீதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

கரூர்
நிரந்தர மக்கள் நீதிமன்றம்
நிரந்தர மக்கள் நீதி மன்றத்தின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது பயன்பாட்டு சேவைகள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
கரூர் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத்திற்கு வரும் முன்பு வருகிற தகராறுகள் அல்லது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறிப்பிட்ட இடைவெளியில் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.
 இதன் தொடர்ச்சியாக விமானம், சாலை அல்லது நீர்வழி மூலம் (பயணிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லுதல்), போக்குவரத்து சேவைகள், அஞ்சல் அல்லது தொலைபேசி மின்சாரம் அல்லது குடிநீர் வழங்கும் சேவை, பொது பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரம், மருத்துவமனைகள், காப்பீடு, கல்வி அல்லது கல்வி நிறுவனங்கள், வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவைகள் சம்பந்தமாக அரசு பொது மற்றும் தனியார் உள்ளிட்ட எந்த நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்து உரிய நிவாரணம் பெறலாம். 
மேல் முறையீடு செய்ய முடியாது
பொது பயன்பாட்டு சேவைகளில் அனுபவமுள்ள இரண்டு பேர் உறுப்பினர்களாகவும், மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள நீதிபதி தலைவராகவும் கொண்டு நிரந்தர மக்கள் நீதிமன்றம் கரூர் பழைய நீதிமன்றம் வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுமுறை சமரச தீர்வு மையத்தில் இயங்கி வருகிறது. 
நிரந்தர மக்கள் நீதிமன்றம் முன்பு வழக்கமான நீதிமன்ற விதிமுறைகளின்றி சாதாரணமான முறையில் மனு தாக்கல் செய்யலாம். இதன்மூலம் வழக்குகளை விரைந்து முடிக்கலாம். இரு தரப்பினர்களும் ஆஜரான பின்பு சமரச முறையில் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும். ஏதாவது ஒரு தரப்பினர் சமரசத்திற்கு முன் வர தவறும் பட்சத்தில் அந்த நபருக்கு, நிறுவனத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இறுதியான உத்தரவு பிறப்பிக்கப்படும்.
 இதன் முடிவு உரிமையியல் நீதிமன்றத்திற்கு சமமானது. நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேல் முறையீடு செய்ய முடியாது. இந்த உத்தரவு இறுதியானது. கடுமையான நடைமுறைகள் இன்றி ஏழை-எளிய மக்கள் பயன் பெறலாம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story