வீடு புகுந்து ரூ.15 லட்சம் நகை-பணம் திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


வீடு புகுந்து ரூ.15 லட்சம் நகை-பணம் திருட்டு; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 July 2021 8:22 PM GMT (Updated: 20 July 2021 8:22 PM GMT)

சென்னராயப்பட்டணாவில் வீடு புகுந்து ரூ.15 லட்சம் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஹாசன்: சென்னராயப்பட்டணாவில் வீடு புகுந்து ரூ.15 லட்சம் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

வீடு புகுந்து திருட்டு

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா டவுன் குவெம்பு நகரை சேர்ந்தவர் திவாகர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் திவாகர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு துணையாக திவாகரின் மனைவியும் மருத்துவமனையில் தங்கியிருந்தார். இதனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. 

இதனை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை-பணத்தை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் திவாகரின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். 

மோப்ப நாய் வருகை

இதையடுத்து திவாகரின் மனைவி வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள் வீடு புகுந்து நகை-பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, சென்னராயப்பட்டணா டவுன் போலீசில் அவர் புகார் கொடுத்தார். 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களை வரவழைத்தனர். நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. 

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்துகொண்டனர். இதுகுறித்து சென்னராயப்பட்டணா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story