யானை தாக்கியதில் மாணவி, தந்தை படுகாயம்
கீரிப்பாறை அருகே யானை தாக்கியதில் கல்லூரி மாணவியும், தந்தையும் படுகாயம் அடைந்தனர்.
அழகியபாண்டியபுரம்:
கீரிப்பாறை அருகே யானை தாக்கியதில் கல்லூரி மாணவியும், தந்தையும் படுகாயம் அடைந்தனர்.
டீக்கடை உரிமையாளர்
கீரிப்பாறை வாைழயத்துவயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52). இவர் கீரிப்பாறை அருகே மாறாமலை எஸ்டேட் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஸ்ரீணா (20). இவர் கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது அவர் சொந்த ஊரில் இருந்தார்.
மணிகண்டன் வழக்கம் போல் நேற்று காலை 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் மாறாமலை டீக்கடைக்கு புறப்பட்டார். அந்த டீக்கடையின் அருகே உள்ள ஒரு கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் கலந்து கொள்வதற்காக மணிகண்டனுடன் மகள் ஸ்ரீணாவும் உடன் சென்றார்.
யானை தாக்கியது
தந்தை, மகள் இருவரும் சென்று கொண்டிருந்த போது, வழியில் சாலையோரம் 3 யானைகள் நின்று கொண்டிருந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், உடனடியாக மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றார். ஆனால் அதற்குள், யானை மோட்டார் சைக்கிளை காலால் எட்டி தள்ளியது.
இதில் தந்தையும் மகளும் கீழே விழுந்தனர். உடனே ஒரு யானை ஸ்ரீணாவை காலால் மிதித்தது. இதில் அவர் படுகாயம் அடைந்து வலியால் அலறி துடித்தார். மேலும், கீழே விழுந்ததில் மணிகண்டனின் இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கூச்சலிட்டபடி யானைகளை துரத்தினர். பொதுமக்களை கண்டதும் யானைகள் அங்கிருந்து சென்று விட்டன.
பரபரப்பு
இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த தந்தை, மகளை பொதுமக்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story