நாகை மாவட்ட பள்ளிவாசல்களில் ‘பக்ரீத்’ சிறப்பு தொழுகை திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு


சிறுமிகள் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்த காட்சி.
x
சிறுமிகள் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்த காட்சி.
தினத்தந்தி 21 July 2021 7:50 PM IST (Updated: 21 July 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட பள்ளிவாசல்களில் ‘பக்ரீத்’ சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம்:-

நாகை மாவட்ட பள்ளிவாசல்களில் ‘பக்ரீத்’ சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். 

‘பக்ரீத்’ பண்டிகை

இறை தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ‘ஹஜ் பெருநாள்’ எனப்படும் ‘பக்ரீத்’ பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. 
வழக்கம்போல் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற நாகூர் தர்கா, நாகை யாஹுசைன் பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல் மற்றும் நாகையை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

பிரார்த்தனை

இந்த சிறப்பு தொழுகையில் அதிகாலை முதலே புத்தாடை அணிந்துகொண்டு திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி சிறப்பு தொழுகை நடந்தது.
இதில் கொரோனா பிடியில் இருந்து மக்கள் மீண்டு வர பிரார்த்தனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் ஏழை, எளியவர்களுக்கு இறைச்சியை குர்பானியாக கொடுத்தனர். 

நாகூர் தர்கா

நாகூர் தர்காவில் நடைபெற்ற தொழுகைக்கு பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல திட்டச்சேரி, வடகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியர்கள் சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நாகூரில் உள்ள ஏழு லெப்பை ஜாமியா மஸ்ஜித், செய்யது பள்ளி, தெருப்பள்ளி, தர்கா காதிரிய்யா மதரஸா, திவான் மஸ்ஜித் ஆகிய இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. 
கீழ்வேளூர் அருகே குருக்கத்தி, கூத்தூர், இரட்டைமதகடி, இறையான்குடி, ஆழியூர், சிக்கல், பொரவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று பக்ரீத் பெருநாள் தொழுகை நடந்தது. 

Next Story