அபிராமச்சேரி கால்வாயை சீரமைக்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கை


அபிராமச்சேரி கால்வாயை சீரமைக்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 July 2021 5:07 PM GMT (Updated: 2021-07-21T22:37:02+05:30)

காவேரிப்பாக்கம் அருகே அபிராமச்சேரி கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் ஏரி

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மிகவும் பெரிய ஏரி காவேரிப்பாக்கம் ஏரி. இந்த ஏரியானது ஒருமுறை நிரம்பி வழிந்தால் சுமார் 3 போகம் அறுவடை செய்யலாம் என்பது சிறப்பாகும். ஏரி நிரம்பிய காலங்களில் 10 மதகுகள் வாயிலாக கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீர் பெறப்பட்டு சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் அபிராமச்சேரி அருகே உள்ள மூலமதகு கால்வாயில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பழுதாகி ஏரியில் இருந்து நீர்வராமல் தடைப்பட்டது.
இந்த நிலையில் மதகு வழியாக சிறிதளவு தண்ணீர் மட்டுமே வந்து கொண்டு இருக்கிறது. இந்த நீரைப் பயன்படுத்தி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

நிலத்தில் மழைநீர்

தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் காவேரிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகின்றன. மூலமதகு போதிய அளவு பராமரிப்பு இல்லாத காரணத்தால் கால்வாயில் மழை தண்ணீர் செல்ல வழியில்லாமல் தாழ்வான பகுதிகளில் உடைப்பு ஏற்படுகிறது. 

இதன் காரணமாக அறுவடைக்கு தயாராகி வரும் நெல் வயலில் தண்ணீர் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதேபோல் வாழை தோட்டத்தில் நாள் கணக்கில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாழை தோட்டம் வளர்ச்சி இல்லாமல் அழுகும் சூழ்நிலை  உள்ளது. மூலமதகில் தொடங்கிய கால்வாய் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் பாய்ச்சி இறுதியாக அபிராமச்சேரி வழியாக மடுவு பகுதியில் செல்லும்.  இதனால் பயிர்கள் சேதம் ஏற்படாது. 

தற்போது அபிராமச்சேரி கால்வாய் பராமரிப்பு இல்லாத காரணத்தால் முட்புதர்கள் மண்டி தண்ணீர் வெளியேற வழியில்லாமல் விவசாய நிலங்களில் தேங்கி கிடக்கிறது.

கால்வாய் சீரமைக்க வேண்டும்

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவேரிப்பாக்கம் ஏரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கால்வாய் சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து எங்களுக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என கூறியதாக தெரிகிறது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மழைநீரை வெளியேற்ற அபிராமச்சேரி கிராமம் அருகே பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு சீரமைத்தனர்.

 இதற்கிடையில் போதிய பொருளாதாரம் பற்றாக்குறை காரணமாக பாதியிலேயே நிறுத்திவிட்டனர். தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் அபிராமச்சேரி கால்வாயின் கீழ் பகுதியில் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் செய்வதறியாது உள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டபோது கால்வாய் பராமரிப்பு செய்வது பொதுப்பணித்துறை அதிகாரியின் வேலை கிடையாது. எங்களுடைய வேலை என்னவென்றால் வரத்துக்கால்வாய் பராமரித்தல், மதகு பராமரிப்பு மற்றும் சீரமைப்பு செய்தல், கரையை பதப்படுத்துதல், உள்ளிட்ட வேலைகள் தான். மேலும் விவசாயிகள் கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை வைத்தால் மதகு பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு சீரமைத்து தருவோம். விவசாயிகள் கால்வாயை நீர்ப்பாசன சங்கத்தின் மூலம் சீரமைத்து கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் நாங்கள் ஆலோசனை வழங்குவோம் என்றார். 

எனவே, மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அபிராமச்சேரி கால்வாயை சீரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story