ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு ரூ 650 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் பி ஏ பி திட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு


ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு ரூ 650 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் பி ஏ பி திட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 July 2021 5:19 PM GMT (Updated: 2021-07-21T22:49:36+05:30)

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு ரூ.650 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பொள்ளாச்சி

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு  ரூ.650 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பி.ஏ.பி. திட்டம்

பரம்பிக்குளம்-ஆழியாறு (பி.ஏ.பி.) திட்டத்தில் மொத்தம் 50.50 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கிறது. இதில் தமிழக-கேரள ஒப்பந்தத்தின்படி 30.50 டி.எம்.சி. தமிழகத்துக்கும், 19.55 டி.எம்.சி. கேரளாவுக்கும் வழங்க வேண்டும். 

அதன்படி தமிழகத்துக்கு வழங்கப்படும் 30.50 டி.எம்.சி. தண்ணீர் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கர் நேரடி பாசனம் பெற்று வருகின்றன. இதுதவிர கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த திட்டம் விளங்கி வருகிறது.  

விவசாயிகள் எதிர்ப்பு

இது ஒருபுறம் இருக்க தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பி.ஏ.பி. விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு பரம்பிக்குளம்- ஆழியாறு அணை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. 

இதற்கான சாத்திய கூறுகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பி.ஏ.பி. திட்டத்தில் தண்ணீர் வழங்குவது தொடர்பாக ஆண்டுதோறும் விவசாயிகளிடையே பிரச்சினை நிலவி வருகிறது. 

இதற்கிடையில் இங்கிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதற்கு பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

இதுகுறித்து திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறியதாவது:-

கண்டிக்கத்தக்கது

ஒட்டன்சத்திரம் நகராட்சி குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ரூ.650 கோடியில் செலவில் பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. 

ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் பாலாறு, பெருந்தலாறு, வரதமாநதி ஆகியவை உள்ளது. மேலும் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வற்றாத ஜீவநதியான அமராவதியும் அருகில் செல்கிறது.

ஆனால் 60 கிலோ மீட்டர் தூரம் தாண்டி பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்துவதன் நோக்கம் தெரியவில்லை. அருகில் உள்ள காவிரி, பாலாறு, அமராவதியை விட்டு விட்டு பி.ஏ.பி. திட்டத்திற்கு வருவது கண்டிக்கதக்கது.

மாற்று திட்டம் 

ஏற்கனவே பி.ஏ.பி. திட்டத்தில் இருமாநிலத்திற்கு இடையேயான நீர்பங்கீடு பிரச்சினை இன்னும் தீரவில்லை. பி.ஏ.பி. திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் வழங்க முடியவில்லை. 

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தண்ணீர் கிடைக்கிறது. அதுவும் உறுதியாக கிடைப்பதில்லை. எனவே பி.ஏ.பி. திட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல திருமூர்த்தி திட்டக்குழு கடுமையான ஆட்சபனை செய்கிறது. 

எனவே மாற்று திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் திருமூர்த்தி திட்டக்குழு கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதிக்க முடியாது

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன நலச்சங்க செயலாளர் செந்தில் கூறியதாவது:-

பி.ஏ.பி. திட்டத்தில் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக ஒப்பந்தத்தை புதுப்பித்து ஆனைமலை யாறு-நல்லாறு அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கு கேரள அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம். 

இதற்கிடையில் பி.ஏ.பி. திட்டத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முயற்சிப்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் அனுமதிக்கமாட்டோம்.

 இவ்வாறு அவர் கூறினார்.


Next Story