ஆகஸ்டு 9-ந் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்-தென்மண்டல லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் பேட்டி
ஆகஸ்டு 9-ந் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தென்மண்டல லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறினார்.
நாமக்கல்:
ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு நலச்சங்கத்தின் தலைவர் கோபால்நாயுடு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சண்முகப்பா, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் லாரிகளில் ஏற்றப்படும் பொருட்களுக்கு ஏற்றுகூலி, இறக்குகூலியை பொருட்களை அனுப்புபவரும், பொருட்களை வாங்குபவரும் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காலாவதியான சுங்கச்சாவடிகள்
இதைத்தொடர்ந்து சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டீசல் விலை ரூ.28 உயர்த்தப்பட்டு உள்ளது. குறிப்பாக 36 முறை டீசல் விலையை உயர்த்தி உள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைப்போம் என தேர்தல் நேரத்தில் அறிவித்தார். எனவே இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைத்தால் அனைத்து மாநிலங்களும் குறைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்.
நாடு முழுவதும் 571 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் 42 சுங்கச்சாவடிகளில் 33 சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டன. அதாவது சாலை அமைத்ததற்கான பணம் வசூல் செய்யப்பட்டு விட்டது. இதேபோல் கர்நாடகாவில் 22 மற்றும் ஆந்திராவில் 17 காலாவதியான சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை மூடுவதற்கு முதல்-அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலவரையற்ற வேலைநிறுத்தம்
வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் பட்டை விவகாரத்தில் கடந்த ஆட்சியாளர்கள்போல் தவறு செய்யாமல், இந்த சட்டத்தை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விபத்தில் இறந்த 80 ஆயிரம் பேருக்கு தரவேண்டிய இழப்பீடு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளை அடித்து கொண்டிருக்கின்றன. எனவே பிரீமிய தொகை உயர்வை வாபஸ் பெற வேண்டும்.
லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி வரை கெடு விதித்திருக்கிறோம். அதற்குள் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு சுமுகமான முடிவை மத்திய, மாநில அரசுகள் எடுக்காவிட்டால், அவசர கூட்டத்தை கூட்டி தென்இந்திய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்க முடிவு செய்து உள்ளோம். இதனால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.
பயோ டீசல்
தமிழகம் முழுவதும், கொரோனா பரவல் காரணமாக 30 சதவீதம் லாரிகள் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக இயக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையை ஒப்பிடும்போது மத்திய, மாநில அரசுகள் டீசல் மீது 220 சதவீதம் வரி விதிக்கின்றன.
இந்த வரி விதிப்பை குறைக்க வேண்டும். 6 மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே டீசல் விலையை உயர்த்த வேண்டும். வாகனங்களுக்கு பயோ டீசல் பயன்படுத்துவதை, அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை எனில் அரசுக்கு கோடி கணக்கான ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நலச்சங்கத்தின் துணை தலைவர்கள் வேலு, ஜவகர் பாஷா, செந்தில்குமார், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ் மற்றும் தென்மண்டல லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story