கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை


கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 22 July 2021 12:09 AM IST (Updated: 22 July 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர்
திட்ட பணிகள்
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து நேற்று மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வாங்கல் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து, கரூர் நகராட்சி பகுதிகளுக்கு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய 8 மில்லியன் கன அடி தண்ணீர் எடுக்க வேண்டும், ஆனால் குடிநீர் குழாய்கள் பழுது காரணமாக தற்போது 6 மில்லியன் கன அடி தண்ணீர்  மட்டுமே எடுக்கப்படுகின்றது. 
இந்த நிலையினை மாற்ற 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு ரூ.11 கோடி செலவு ஆகும் என்று துறை அலுவலர்களால் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. 
தினமும் குடிநீர்
இதேபோல, ஒட்டுமொத்தமாக கரூர் நகராட்சி காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை மேம்படுத்துவதற்காக ரூ.25 கோடி மதிப்பில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும், அனைத்து குடியிருப்புகளுக்கும் தினமும் குடிநீர் வழங்குவதே இலக்கு ஆகும். பொதுமக்கள் பணிக்கு செல்வதற்கு முன்பாக தினமும் காலை 5 மணியில் இருந்து 8 மணி வரை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
ஏற்கனவே ரூ.68 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீர் திட்டப்பணிகளும் தற்போது ஆய்வு செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காமராஜர் மார்க்கெட்
அதனை தொடர்ந்து, கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காமராஜர் மார்க்கெட் பகுதியில் குளிர்சாதனக்கிடங்கு வசதியுடன் கூடிய புதிய காய்கறி வணிக வளாகம் அமைப்பது தொடர்பாகவும், கரூர் வெங்கமேடு புதுக்குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்டில் பழுதடைந்த கடைகளையும், சுங்ககேட் பகுதியில் புதிய இறைச்சி கூடம் அமைப்பதற்கான இடம் தொடர்பாகவும் அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் காமராஜர் மார்க்கெட் பகுதியில் குளிர்சாதன கிடங்கு வசதியுடன் கூடிய புதிய காய்கறி வணிகவளாகம் அமைக்க ரூ.10 கோடியே 25 லட்சம் கோடி மதிப்பில் கட்டுவதற்கான விரிவான திட்ட கருத்துரு தயார் செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் அனுமதியுடன் சிறப்பு நிதி பெற்று விரைவில் புதிய குளிர்சாதன கிடங்கு வசதியுடன் கூடிய காய்கறி வணிக வளாகம் கட்டப்படும் என்றார்.

Next Story