மாநில கராத்தே போட்டியில் கலந்து கொள்ள நிதி உதவி


மாநில கராத்தே போட்டியில் கலந்து கொள்ள நிதி உதவி
x
தினத்தந்தி 21 July 2021 7:45 PM GMT (Updated: 2021-07-22T01:15:31+05:30)

மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்ள நிதி உதவியை மாணவனுக்கு கலெக்டர் வழங்கினார்.

விருதுநகர், 
அருப்புக்கோட்டை சக்திவேல் முருகன்- முத்துரத்தினம் தம்பதியரின் மூத்த மகன் ஹரி பிரசாத். 16 வயதான இந்த மாணவன் சாலியர் மகாஜன பள்ளியில் பிளஸ்-1 பயின்று வருகிறார். மதுரை கராத்தே பயிற்சி மையத்தில் கடந்த 9 வருடங்களாக பயிற்சி பெற்று வருகிறார். மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தேபோட்டிகளில் பல்வேறு பதக்கங்களை பெற்று உள்ளார். தற்போது திருச்சி அண்ணா திடலில் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசு கராத்தே சாம்பியன் 2021 போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இந்த மாணவனின் ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை காரணமாக இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாத நிலையை தெரிந்த கலெக்டர் மேகநாத ரெட்டி, தாசில்தார் மூலம் அந்த மாணவனின் நிலையை ஆய்வு செய்து அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் மாணவனுக்கு கராத்தே போட்டியில் பங்கு கொள்வதற்காக ரூ.15,000 காசோலை மூலம் வழங்கினார். மேலும் அந்த மாணவனை கராத்தே பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி மீதமுள்ள நேரங்களில் நேரத்தை வீணாக்காமல் திட்டமிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். அந்த மாணவனும் உதவித்தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்ததோடு தான் நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு வருவேன் என கலெக்டரிடம் உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், அருப்புக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story