கர்நாடகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேர் ஜார்கண்டில் கைது


கர்நாடகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேர் ஜார்கண்டில் கைது
x
தினத்தந்தி 21 July 2021 9:05 PM GMT (Updated: 2021-07-22T02:35:10+05:30)

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேர் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரிடம் 102 முறை ஓ.டி.பி. எண் பெற்று ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டு இருந்தனர்.

பெங்களூரு: பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேர் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரிடம் 102 முறை ஓ.டி.பி. எண் பெற்று ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டு இருந்தனர்.

ரூ.10 லட்சம் மோசடி

பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் எல்லப்பா ஜாதவ். இவர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இவரது வங்கி கணக்கு காலாவதியாகி விட்டதாக கூறி, அந்த வங்கி கணக்கை புதுப்பிக்கும்படி கூறி மர்மநபர்கள் சிலர் கடந்த மாதம் (ஜூன்) பேசி இருந்தனர். பின்னர் எல்லப்பா ஜாதவின் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை பெற்று, அவரது வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்து மர்மநபர்கள் மோசடி செய்து வந்தனர்.

இவ்வாறு 102 முறை மர்மநபர்களுக்கு தனது செல்போனுக்கு வந்திருந்த ஓ.டி.பி. எண்ணை எல்லப்பா ஜாதவ் சொல்லி இருந்ததால், அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.10 லட்சத்தையும் மர்மநபர்கள் எடுத்து மோசடியில் ஈடுபட்டு இருந்தனர். இதுகுறித்து கடந்த மாதம் ஜூன் 9-ந் தேதி எல்லப்பா ஜாதவ் கொடுத்த புகாரின் பேரில் பெலகாவி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். மர்மநபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

3 பேர் கைது

இந்த நிலையில், பெலகாவி சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் எல்லப்பா ஜாதவ் உள்ளிட்ட ஏராளமான நபர்களிடம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரை ஜார்கண்டில் வைத்து கைது செய்துள்ளனர். கைதானவர்கள் ஜாாகண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்திரபிரசாத் (வயது 30). இவரது மனைவி ஆஷாதேவி (25) மற்றும் இவர்களுக்கு உதவிய மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்த அன்வர் சேக் (24) என்று தெரிந்தது. இவர்கள் 3 பேரும் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அதாவது பெங்களூரு, பெலகாவி, மங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் செல்போன் சிம் கார்டுகள் மற்றும் வங்கி கணக்கு காலாவதியாகி விட்டது, அதனை புதுப்பிக்க வேண்டும் என்று கோரி, ஏராளமான பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து பல லட்சத்தை எடுத்து மோசடியில் ஈடுபடுவதை 3 பேரும் தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது.

408 சிம் கார்டுகள் பறிமுதல்

அதுபோல், தான் எல்லப்பா ஜாதவிடம் தொடர்பு கொண்டு பேசி, அவரது செல்போனுக்கு வந்த ஓ.டி..பி. எண்ணை பெற்று, ரூ.10 லட்சத்தை எடுத்து மோசடி செய்திருந்தார்கள். கைதான 3 பேரிடம் இருந்து 304 செல்போன்கள், 408 சிம் கார்டுகள், 3 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களது 50 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. அந்த வங்கி கணக்குகளில் ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் இருந்ததும் தெரிந்தது. அதனை போலீசார் முடக்கி உள்ளனர்.

கைதான 3 பேர் மீதும் பெலகாவி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் 3 பேரையும் பெலகாவிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பெலகாவி மாவட்ட போலீஸ் கமிஷனர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story