பிளஸ்-2 மாணவி பலாத்காரம் 10-ம் வகுப்பு மாணவி கடத்தல்
காதலிப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, 10-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
குழித்துறை:
காதலிப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, 10-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
காதலிப்பதாக பலாத்காரம்
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி, தனது தந்தையுடன் வசித்து வருகிறார். அவருடைய தந்தை சற்று மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது. மாணவியின் தாயார் வெளியூரில் தங்கி வேலை செய்கிறார்.
இந்த நிலையில் மாணவியுடன், மார்த்தாண்டம் ஆர்.சி.தெருவை சேர்ந்த அபி (வயது 19) என்ற வாலிபர் பழகி வந்தார். பின்னர் அவர் மாணவியிடம் காதலிப்பதாகவும், உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறினார். அதை நம்பிய மாணவியை, தனது வீட்டுக்கு அபி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தன்னை அபி திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையுடன் மாணவி இருந்து வந்தார்.
மற்றொரு மாணவியுடன் ஓட்டம்
ஆனால் அவருடைய நம்பிக்கை பொய்த்து போனது. அவரை ஏமாற்றி விட்டு வேறொரு மாணவியுடன் அபி ஓடிய அதிர்ச்சி தகவல் பிளஸ்-2 மாணவிக்கு தெரிய வந்தது.
காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்த அபி மீது பிளஸ்-2 மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
வாலிபர் கைது
அதே சமயத்தில், அபியுடன் ஓடிய மாணவியின் தாயாரும் போலீசில் புகார் கொடுத்தார். அதில், 10-ம் வகுப்பு படித்து வரும் எனது மகளை அபி கடத்தி சென்று விட்டதாக கூறியிருந்தார். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கடத்திய மாணவியை தன் வீட்டிலேயே அபி தங்க வைத்து இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அபியை அதிரடியாக கைது செய்து, மாணவியை மீட்டனர்.
பின்னர் இரு மாணவிகளையும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் ஒருவர் மாணவிகளிடம் காதல் லீலையில் ஈடுபட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story