சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கொரோனா ஊரடங்கால் ஆடித்திருவிழா ரத்து-கடந்த ஆண்டைபோல் எளிமையாக நடத்த முடிவு


சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கொரோனா ஊரடங்கால் ஆடித்திருவிழா ரத்து-கடந்த ஆண்டைபோல் எளிமையாக நடத்த முடிவு
x
தினத்தந்தி 22 July 2021 3:02 AM IST (Updated: 22 July 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா ரத்து செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைபோல் எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
கொரோனா ஊரடங்கால் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா ரத்து செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைபோல் எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோட்டை மாரியம்மன் கோவில்
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கோவிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆடித்திருவிழாவும் நடத்தப்படவில்லை.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலை பொறுத்தவரையில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா 22 நாட்கள் வெகு சிறப்பாக நடக்கும். இந்த கோவிலில் கம்பம் நட்டபிறகே மாநகரில் உள்ள மற்ற அம்மன் கோவில்களிலும் திருவிழா தொடங்குவது ஐதீகம். 
ஆனால் கொரோனா பரவல் மற்றும் கோவிலில் நடக்கும் திருப்பணிகள் போன்ற காரணங்களால் கடந்த ஆண்டைபோல் இந்தாண்டும் ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திருவிழாவை எளிமையாக நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆடித்திருவிழா ரத்து
இது ஒருபுறம் இருக்க, பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல எந்த தடையும் இல்லை. ஆனால் பால்குடம், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், உருளுதண்டம் உள்ளிட்ட எவ்வித நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி மிக எளிமையாக நடந்தது. அதேபோல், ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு தினமும் அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படும்.
ஆனால் அபிஷேகம் செய்யும்போது பக்தர்கள், கட்டளைதாரர்கள் பங்கேற்க முடியாது. கொரோனா பரவல் குறைந்து வருவதால் இந்தாண்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தாண்டும் ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story