மானியத்துடன் வீடு கட்ட 50 பேருக்கு பணி உத்தரவு
அனைவருக்கும் வீடு திட்டத்தில் மானியத்துடன் வீடு கட்ட 50 பேருக்கு பணி உத்தரவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை, தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்படி தேனி தொழிற்பேட்டையில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் தொழில்அதிபர்கள், வர்த்தகர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், மத்திய, மாநில அரசு நிதியுதவி மற்றும் பயனாளிகள் பங்களிப்புடன் தேனியில் வீடு கட்டும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். அதன்பிறகு தப்புக்குண்டு, சின்னமனூர் அருகே அப்பிப்பட்டி ஆகிய இடங்களில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை அவர் பார்வையிட்டார்.
அப்போது பணிகள் தரமாக நடந்துள்ளதா? அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என அவர் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி உத்தரவு மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் வங்கிக்கடன் பெற்று தொழில் தொடங்குவதற்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி தேனியில் நடந்தது.
இதில், 50 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் மானியத்துடன் வீடுகட்டுவதற்கான உத்தரவு, மாவட்ட தொழில் மையம் சார்பில் 7 பயனாளிகளுக்கு அரசு மானியத் தொகையில் ரூ.13 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் பல்வேறு தொழில் தொடங்குவதற்கான உத்தரவு ஆகியவற்றை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜிதாமஸ் வைத்யன், மாவட்ட கலெக்டர் முரளிதரன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், கே.எஸ்.சரவணக்குமார், மகாராஜன், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story