நேரடி நெல் விதைப்பு வயலில் பூச்சிக்கொல்லி மருந்தை டிரோன் மூலம் தெளித்து செயல் விளக்கம்


நேரடி நெல் விதைப்பு வயலில் பூச்சிக்கொல்லி மருந்தை டிரோன் மூலம் தெளித்து செயல் விளக்கம்
x
தினத்தந்தி 22 July 2021 2:05 PM GMT (Updated: 2021-07-22T19:35:57+05:30)

நேரடி நெல் விதைப்பு வயலில் பூச்சிக்கொல்லி மருந்தை டிரோன் மூலம் தெளித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

குத்தாலம், 

காவிரி பாசனப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தை ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் செயல்படுத்தி வருகிறது. காவிரி பாசன பகுதியில் கிடைக்கும் தண்ணீரை திறம்பட விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் உயரிய வேளாண்மை தொழில் நுட்பங்களை செயல் விளக்க வடிவில் அமைப்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

அதன்படி இத்திட்டத்தின் செயல்பாடுகளில் ஒன்றான நேரடி நெல் விதைப்பு குறித்து, குத்தாலம் நக்கம்பாடி கிராமத்தில் செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அம்பேத்கர் தலைமை தாங்கி, பூச்சிக்கொல்லி மருந்தை டிரோன் வாயிலாக தெளிக்கும் முறையை பற்றி விளக்கினார். குத்தாலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெற்றிவேலன் ஒருங்கிணைந்த உர நிர்வாகம், குறைந்த சாகுபடி செலவு குறித்து விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில், ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம் பற்றி பேராசிரியர் ராமநாதன், மண்வளம் பற்றி இணை பேராசிரியர் சத்தியபாமா, நெல்லில் பூச்சி தாக்குதல் மற்றும் மேலாண்மை முறைகள் பற்றி உதவி பேராசிரியர் ஆனந்தி ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். உயிர் பூஞ்சானம் கொல்லியான பேசிலஸ் சப்சடலிஷ் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு உதவி பேராசிரியர் சித்ரா, நேரடி நெல் சாகுபடி உழவியல் தொழில் நுட்பம் குறித்து உமாமகேஸ்வரி ஆகியோர் விளக்கி பேசினர்.

உழவியல் இணை பேராசிரியர் ராஜூ நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில், 50-க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள், திட்ட களப்பணியாளர்கள் வேல்முருகன், சீத்தாராமன், ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story