சிறுமிகளுக்கு எதிராக குற்றங்கள் மீது 115 போக்சோ வழக்குகள் பதிவு


சிறுமிகளுக்கு எதிராக குற்றங்கள் மீது 115 போக்சோ வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 22 July 2021 3:09 PM GMT (Updated: 2021-07-22T20:39:55+05:30)

சிறுமிகளுக்கு எதிராக குற்றங்கள் மீது 115 போக்சோ வழக்குகள் பதிவு

கோவை

கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் மீது 115 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இடங்கள், வழக்குகளில் நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசாருக்கு கடந்த வாரம் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.  

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. 


இங்கு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பான புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதை 3 பிரிவுகளாக பிரித்து கடந்த 3½ ஆண்டுகளாக வழக்கு பதிவு செய்து உள்ளோம். 

முதல் பிரிவில் 12 முதல் 18 வயது வரை உள்ள சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

115 போக்சோ வழக்குகள் பதிவு

பிரிவு 2-ல் முகம் தெரிந்த நபர்கள் மற்றும் உறவினர்களால் குழந்தை களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 32 வழக்குகள் பதிவு செய்து உள்ளோம். பிரிவு 3-ல் குழந்தை திருமணங்கள் நடத்தி வைத்த தை கண்டறிந்து 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

பெண் குழந்தைகளை ஆபாசமாக வீடியோ எடுப்பது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

 இதில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில்தான் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களில் அதிக போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 


அந்தவகையில் முதல் பிரிவில் 51 வழக்குகளும், 2-வது பிரிவில் 11 வழக்குகளும், 3-வது பிரிவில் 27 வழக்குகளும், 

பெண் குழந்தைகளை ஆபாசமாக வீடியோ எடுப்பது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக 26 வழக்குகளும் என மொத்தம் 115 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

மாணவிகளுக்கு விழிப்புணர்வு

மாவட்ட கல்வி அதிகாரியிடம், பள்ளிகளின் விவரங்களையும் சேகரித்து பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர்களின் ஒப்புதல் பெற்று இன்ஸ்பெக்டர்கள் மூலமாக மாணவிகளுக்கு ஆன்லைன் வழியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். 

இதற்கு தற்போது 4 பள்ளிகள் அனுமதி அளித்து உள்ளன.

வடவள்ளியில் தொடர்ந்து கைவரிசை காட்டும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. போதை மாத்திரை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

சோதனைச் சாவடிகளில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை பிடித்து அபராதம் விதித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story