உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு விஷம் வைத்து கொல்லப்பட்ட 50 நாட்டுக்கோழிகள் போலீசார் விசாரணை


உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு விஷம் வைத்து கொல்லப்பட்ட 50 நாட்டுக்கோழிகள் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 July 2021 9:52 PM IST (Updated: 22 July 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே 50 நாட்டுக்கோழிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ சுரேஷ். தொழிலாளியான இவர் தனது வீட்டின் பின்புறம் தோட்டம் அமைத்து 10 சண்டைக் கோழிகள் உட்பட 50 நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென இந்த கோழிகள் ஒவ்வொன்றாக செத்து மடிய தொடங்கின. மொத்தம் 30 கோழிகள் செத்தன. உடல்நிலை சரியில்லாமல் அவைகள் இறந்திருக்கலாம் என கருதிய ராஜ சுரேஷ் செத்துப்போன கோழிகளை தோட்டத்திலேயே புதைத்தார்.

இந்த நிலையில் நேற்று காலை மீதமுள்ள 20 கோழிகளும் ஒவ்வொன்றாக செத்து மடிந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜசுரேஷ் கோழிகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்தை சுற்றிப் பார்த்தார். அப்போது அங்கு விஷம் கலந்த இறைச்சி துண்டுகள் கிடந்தன. இதனால் யாரோ மர்ம நபர்கள் விஷம் கலந்த இறைச்சி துண்டுகளை போட்டு கோழிகளை கொன்று இருப்பது தெரியவந்தது. இறந்து போன கோழிகளின் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் ராஜ சுரேஷ் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி கோழிகளை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாக்கம் ஊராட்சியில் ராஜ சுரேஷ் போட்டியிடவுள்ள நிலையில் அவரது எதிரிகள் யாரேனும் கோழிகளை விஷம் வைத்து கொன்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷம் வைத்து 50 நாட்டுக்கோழிகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்பாக்கம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story