சூரியகாந்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள்


சூரியகாந்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள்
x
தினத்தந்தி 22 July 2021 10:05 PM IST (Updated: 22 July 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை பகுதியில் சூரியகாந்தி சாகுபடியில் ஒருசில விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில் கிளிகள் மற்றும் மழையால் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

போடிப்பட்டி
உடுமலை பகுதியில் சூரியகாந்தி சாகுபடியில் ஒருசில விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில் கிளிகள் மற்றும் மழையால் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.
ஆண்டுக்கு 4 பட்டங்கள்
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகியற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்து வருகிறது.கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை போன்றவை இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் உடுமலை பகுதியில் ஒருசில இடங்களில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
சூரியகாந்தி சாகுபடியை பொறுத்தவரை ஆடிப் பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். இதுதவிர இறவை பாசனத்தில் மார்கழி பட்டம் மற்றும் சித்திரை பட்டங்களில் சாகுபடி மேற்கொள்ளலாம். அந்தவகையில் ஆண்டுக்கு 4 பட்டங்களில் சூரியகாந்தி சாகுபடி மேற்கொள்ள முடியும். அதேநேரத்தில் பட்டத்துக்கு தகுந்தாற் போல விதைகளை தேர்வு செய்வது அவசியமாகும். தற்போது வீரிய ஒட்டு ரகங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அவை நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும், அதிக மகசூல் தரக்கூடியவையாகவும் உள்ளன. ஆனாலும் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்வது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், முளைப்புத் திறனை மேம்படுத்தவும் உதவும்.
செயற்கை மகரந்தச் சேர்க்கை
மேலும் ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மையில் உயிர் உரமாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை தேவையான அளவில் வழங்குகிறோம். சூரியகாந்தி பூக்களை பொறுத்தவரை மகரந்த சேர்க்கை மிக முக்கிய இடம் பிடிக்கிறது. நன்றாக மணிகள் பிடிப்பதற்கு மகரந்த சேர்க்கை உதவுகிறது.தற்போது தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நாமே செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்யலாம்.அதற்கு பூக்கொண்டைகளை ஒன்றோடொன்று லேசாக தேய்த்து விடுவது நல்ல பலன் தரும். சூரியகாந்தியைப் பொறுத்தவரை 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். ஆனால் மணிகள் முற்றும் தருணத்தில் கிளிகளிடமிருந்து பாதுகாப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது.கிளிகளுக்கு மிகவும் பிடித்த உணவாக சூரியகாந்தி விதைகள் உள்ளது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் கூட்டமாக கிளிகள் படையெடுக்கும்.அவற்றை தட்டுகள் மற்றும் தகரங்களில் தட்டி ஓசையெழுப்பி விரட்டுவோம்.மேலும் தற்போது அறுவடைக்குப் போதிய ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலமே அறுவடை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.ஒரு ஏக்கருக்கு 750 கிலோ முதல் 900 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.தற்போது செய்துள்ள சாகுபடி இன்னும் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.
சித்திரை பட்டம்
மழைக்காலத்தில் அறுவடை மேற்கொள்வது மற்றும் பூக்களைக் காய வைப்பது கடினமான பணியாகும்.சித்திரைப் பட்டத்தைத் தவற விட்டு சற்று தாமதமாக விதைப்பு செய்ததால் மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஏனென்றால் பூக்கள் நன்கு உலர்ந்த பிறகு விதைகளைப் பிரித்தெடுத்து அவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து அதன்பிறகே விற்பனைக்குத் தயார் செய்ய முடியும்.ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகளில் பூஞ்சாணம் உற்பத்தியாகி இழப்பை ஏற்படுத்தி விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story