2 ஆட்டோக்களுக்கு தீ வைப்பு


2 ஆட்டோக்களுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 22 July 2021 4:49 PM GMT (Updated: 2021-07-22T22:19:32+05:30)

கடலூரில் 2 ஆட்டோக்களை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டை சேர்ந்தவர் ரகுராமன். இவருடைய மகன் சங்கர் (வயது 28). மெக்கானிக். இவரது உறவினர் விஜயன் மகன் கலையரசன் (39). ஒரே வீட்டில் வசித்து வரும் இவர்கள் 2 பேரும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் சவாரி முடித்து விட்டு, பெண்ணையாறு ரோட்டில் உள்ள தங்களது வீட்டுக்கு அருகே 2 ஆட்டோக்களையும் நிறுத்தினர்.
அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென ஆட்டோக்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அறிந்ததும் அவர்கள் ஓடி வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் ஒரு ஆட்டோ முற்றிலும் எரிந்து சேதமானது. மற்றொரு ஆட்டோ ஒரு பகுதி மட்டும் எரிந்து சேதமானது. 
இது பற்றி அவர்கள், கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது பற்றி கலையரசன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 2 ஆட்டோக்களுக்கு தீ வைத்தது யார்? முன்விரோதம் காரணமாக யாராவது தீ வைத்தார்களா? அல்லது தொழில் போட்டி காரணமாக தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஆட்டோக்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் 2 ஆட்டோக்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story