பணியிட மாற்றத்துக்கு வருவாய் ஆய்வாளர்கள் எதிர்ப்பு


பணியிட மாற்றத்துக்கு வருவாய் ஆய்வாளர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 July 2021 5:06 PM GMT (Updated: 22 July 2021 5:06 PM GMT)

பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடுதல் கலெக்டருடன் வருவாய் ஆய்வாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 58 குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோட்டம் விட்டு கோட்டம், தாலுகா விட்டு தாலுகாவுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டு உள்ளது.
குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் 2 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே குறுவட்டத்தில் பணியாற்றுவது நடைமுறையில் உள்ளது. தற்போது பணியாற்றும் அலுவலர்கள் பகுதி குறுவட்டத்தை முழுமையாக அறிந்து பணியாற்றுவதற்கும், பணிகளை சிறப்பாக செய்வதற்கும் வழிவகுக்கும். ஆனால் தற்போது கோட்டம் விட்டு கோட்டம், தாலுகா விட்டு தாலுகாவுக்கு வருவாய் அலுவலர்கள் மாற்றப்பட்டு இருப்பது, கிராமங்களை அறிந்து அவர்கள் பணி தாமதம் ஏற்படும்.

போராட்டம் நடத்த திரண்டனர்

சட்டம், ஒழுங்கு, இயற்கை இடர்பாடுகள், கொரோனா தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பணி மாறுதலை கண்டித்தும், மீண்டும் வருவாய் ஆய்வாளர்களை அதே இடத்தில் பணி அமர்த்த வேண்டும், முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை, அந்தந்த வட்டத்திலேயே வேறு பணியிடத்தில் அமர்த்த வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் செயலாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் ராஜேஷ்பாபு, பொருளாளர் ஜான்பிரிட்டோ மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்களை கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சங்க நிர்வாகிகள் சென்று, பணியிட மாறுதலை கைவிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. 

பரபரப்பு

இதையடுத்து தலைவர் மகேஷ் திடீரென பேச்சுவார்த்தை கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அவரை சக நிர்வாகிகள் அழைத்து மீண்டும் கூடுதல் கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள் என்று கூடுதல் கலெக்டர் கூறினார். 
இதையடுத்து அவர்கள் மனுவாக எழுதி கொடுத்து விட்டு வந்தனர். இருப்பினும் இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story