கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை


கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை  போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 July 2021 5:06 PM GMT (Updated: 2021-07-22T22:36:43+05:30)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடியாட்கள் மூலம் மிரட்டல்

தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தர மற்றும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு தெரிந்த நபர்களிடம் கடன் வாங்குவது உண்டு. 

அதுபோன்ற சம்பவங்களை பயன்படுத்திக்கொள்ளும் உள்ளூர் முதலாளிகள், கடுமையான வட்டியுடன் சம்பந்தபட்டவர்களிடம் பணம் வசூல் செய்வதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே வறுமை நிலையில் இருக்கும் சாதாரண குடும்பத்து மக்கள் கந்து வட்டியால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனை வசூலிக்க அடியாட்கள் மூலம் மிரட்டல் மற்றும் தில்லு முல்லு வேலைகளில் முதலாளிகள் ஈடுபடுகின்றனர். 

கடும் நடவடிக்கை

இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வட்டி வசூல் செய்பவர்கள் தங்களிடம் பணம் பெற்றவர்களிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கைப்பற்றியிருந்தால், அதை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் எந்தவித அச்சமும் இன்றி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை அணுகி தக்க நிவாரணம் பெறும்படியும், இதுபோன்று கந்து வட்டியில் பணம் வசூல் செய்பவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story