தொழிலாளியை அடித்துக்கொன்று உடல் எரிப்பு


தொழிலாளியை  அடித்துக்கொன்று உடல் எரிப்பு
x
தினத்தந்தி 22 July 2021 5:07 PM GMT (Updated: 2021-07-22T22:37:04+05:30)

திருப்பூரில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பிரிண்டிங் நிறுவன தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்று உடலை எரித்த சம்பவத்தில் கள்ளக்காதலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டி
திருப்பூரில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பிரிண்டிங் நிறுவன தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்று உடலை எரித்த சம்பவத்தில் கள்ளக்காதலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
பிரிண்டிங் நிறுவன தொழிலாளி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் வயது 37. இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சந்தோஷ்குமார் தனது குடும்பத்தை நீடாமங்கலத்தில் விட்டு விட்டு, திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி பிரிண்டிங் நிறுவனத்தில் சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இவர் தினமும் செல்போனில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் கடந்த 17ந் தேதி சந்தோஷ்குமார் தனது மனைவிக்கு போன் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக சந்தோஷ்குமாரின் செல்போன் இணைப்பு கிடைக்கப்பெறவில்லை. இதையடுத்து கணவர் போன் செய்வார் என்று காத்திருந்த மனைவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனவே கீதா தனது கணவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றார். ஆனால் அவருடைய செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. 
போலீசில் புகார்
இதனால் கணவருக்கு என்ன ஆனதோ ஏது ஆனதோ என்று கலக்கம் அடைந்தார். இதனால் சந்தோஷ்குமாரை தேடி அவருடைய மனைவி  கீதா மற்றும் சந்தோஷ்குமாரின் பெற்றோர் திருப்பூருக்கு வந்தனர். பின்னர் சந்தோஷ்குமார் வேலை செய்த இடத்திற்கு சென்று விசாரித்தனர். அங்கு அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சந்தோஷ்குமார் தங்கி இருந்த வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். அப்போது சந்தோஷ்குமாருடன் 2 வாலிபர்கள் சண்டை போட்டதாகவும், அதன்பின்னர் அவரை காணவில்லை என்றும் கூறினர்.
இது குறித்து சந்தோஷ்குமாரின் மனைவி வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை தேடி வந்தனர்.
பாதி எரிந்த நிலையில் உடல்
இந்த நிலையில் நேற்று காலை கல்லாங்காடு பாறைக்குழி பகுதியில்  பாதி எரிந்த நிலையில் மனித கால் ஒன்று மண்ணில் இருந்து வெளியே தெரிவதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மனித கால் தெரிந்த இடத்தில் மண் முழுவதையும் அகற்றினர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் பாதி அழுகிய நிலையிலும், மீதி எரிந்த நிலையிலும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ குழுவினரும் அங்கு வந்தனர். பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள்  முன்னிலையில் சம்பவ இடத்திலேயே அந்த உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 
மர்ம ஆசாமிகள் அவரை கொன்று உடலை தீவைத்து எரித்து அவசர அவசரமாக புதைத்து விட்டு சென்றதும், அப்போது உடலை முழுவதும் மண்போட்டு மூடாமல் சென்று இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கொலையானவர் யார்எந்த ஊரை சேர்ந்தவர்  என்று போலீசார் விசாரணை செய்தனர். மேலும் கொலையானவர் அணிந்து இருந்த உடை மற்றும் அவருடைய உடைமைகளை போலீசார் தனியாக எடுத்து வைத்திருந்தனர். இதற்கிடையில் கணவரை தேடி திருப்பூர் வந்த கீதாவை கல்லாங்காடு பாறைக்குழிக்கு அழைத்து சென்று, அங்கு பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் சந்தோஷ்குமாரா என கேட்டனர். அப்போது கொலையானவர் தனது கணவர் சந்தோஷ்குமார்தான் என கீதா அடையாளம் காட்டினார். 
இதையடுத்து சந்தோஷ்குமாரை கொலை செய்தது யார் எதற்காக கொலை செய்தனர் என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாகசந்தோஷ்குமாரின் செல்போனில் யார் யாா் பேசி உள்ளனர் என்ற பட்டியலை தயார் செய்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட எண்ணில்சந்தோஷ்குமார் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது 
இதையடுத்து அந்த செல்போன் எண் யாருடையது என போலீசார் விசாரித்தபோது, அது வீரபாண்டி கல்லாங்காட்டு பகுதியை சேர்ந்த வட்டிக்கு பணம் கொடுக்கும் முருகேஸ்வரி 50 என தெரியவந்தது. இதையடுத்துமுருகேஸ்வரியை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து போலீசார் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது மகன் மற்றும் மகனின் நண்பருடன் சேர்ந்து சந்தோஷ்குமாரை கொலை  செய்ததாக ஒப்புக்கொண்டார்.இதைத்தொடர்ந்துமுருகேஸ்வரி அவருடைய மகன் ஆரோக்கியதாஸ் 25 மற்றும் ஆரோக்கியதாசின் நண்பர் பாலசுப்பிரமணியன் 25ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் முருகேஸ்வரி கூறிய தகவல் குறித்து போலீசார் கூறியதாவது
வட்டிக்கு பணம் கொடுக்கும் முருகேஸ்வரிக்கும்,சந்தோஷ்குமாருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த 17ந் தேதி முருகேஸ்வரி வீட்டுக்கு சந்தோஷ்குமார் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு எழுந்தது. இந்த தகராறில் சந்தோஷ்குமார் தகாத வார்த்தைகளால் முருகேஸ்வரியை தி்ட்டியுள்ளார். இதனை முருகேஸ்வரி தனது மகன் ஆரோக்கியதாஸிடம் தெரிவித்துள்ளார். 
உடலை எரித்தனர்
இதில் ஆத்திரமடைந்த ஆரோக்கியதாஸ், அவரது நண்பர் பாலசுப்பிரமணியன் என்பவரை சேர்த்துக்கொண்டு, தனது தாயார் முருகேஸ்வரி அழைப்பதாக சந்தோஷ்குமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து முருகேஸ்வரியை சந்திக்க அவருடைய வீட்டிற்கு சந்தோஷ்குமார் வந்துள்ளார். அப்போது சந்தோஷ்குமாரை அவர்கள் இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளனர். 
பின்னர் சந்தோஷ்குமார் உடலை அங்கேயே போட்டால் போலீசுக்கு தெரிந்துவிடும் என பயந்து அந்த உடலை கல்லாங்காடு பாறைக்குழி  பகுதிக்கு தூக்கிச்சென்றுள்ளனர். பின்னர் பெட்ரோல் வாங்கி வந்து உடலை எரித்துள்ளனர். ஆனால் உடல் முழுவதுமாக எரியாத நிலையில் பாதி எரிந்தவுடன் உடலை மண்ணை போட்டு மூடி உள்ளனர். ஆனால் அவசரத்தில் கால் மீது மண்போட்டு மூடாததால் கால் வெளியே தெரிந்துள்ளது. 
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைதான 3 பேரையும் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story