போத்தனூர் பொள்ளாச்சி ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணி குறித்து ரெயில்வே பொறியாளர் ஆய்வு
போத்தனூர் பொள்ளாச்சி ரெயில்பாதையில் மின்மய மாக்கல் பணி குறித்து ரெயில்வே பொறியாளர் ஆய்வு செய்தார்.
கிணத்துக்கடவு
போத்தனூர்-பொள்ளாச்சி ரெயில்பாதையில் மின்மய மாக்கல் பணி குறித்து ரெயில்வே பொறியாளர் ஆய்வு செய்தார்.
மின்மயமாக்கல் பணி
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதை, அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் போத்தனூர்- பொள்ளாச்சி இடையேயான அகல ரெயில்பாதையை மின்மயமாக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ரூ.37 கோடியே 36 லட்சம் ஒதுக்கப்பட்டது. பின்னர் பணி தொடங்கப்பட்டு பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை தண்டவாள ஓரங்களில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது.
பொறியாளர் ஆய்வு
தொடர்ந்து கம்பங்களில் மின்கம்பிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் உள்ள நடை மேடை (பிளாட்பாரம்) பகுதிகளில் மின் கம்பங்கள் அமைத்து அதில் கம்பிகளும் அமைக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் தற்போது அங்கு மின் கம்பிகள் சரியாக இணைக்கப் பட்டு உள்ளதா? சரியான அளவில் உள்ளதா? என்பது குறித்து நவீன எந்திரம் மூலம் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
இதற்கிடையே தெற்கு ரெயில்வே சிக்னல் மற்றும் தொலை தொடர்பு பொறியாளர் சுனில் கிணத்துக்கடவு ரெயில் நிலையம் வந்தார். பின்னர் அங்கு ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
ரெயில்வே கேட்
அதன் பின்னர் போத்தனூர் முதல் பொள்ளாச்சி வரை உள்ள 8 ரெயில்வே கேட் பகுதிகளில் உள்ள சிக்னல்களின் செயல்பாடுகளை யும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் சிக்னல்கள் செயல்பாடு குறித்து ரெயில் நிலைய அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது சிக்னல் தொலை தொடர்பு அதிகாரிகள் ரஞ்சித் (சேலம் கோட்டம்), பாஷா, (பாலக்காடு கோட்டம்), போத்தனூர் ரெயில்வே இளநிலை பொறியாளர் தமிழ்செல்வன் மற்றும் என்ஜினீயர்கள் ஷாஜி, மாஜி உட்பட பலர் உடன் இருந்தனர்.
இந்த ஆய்வு குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சோதனை ஓட்டம்
போத்தனூர்-பொள்ளாச்சி இடையே உள்ள சிக்னல்களை ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்து உள்ளது.
விரைவில் போத்தனூர் -பொள்ளாச்சி இடையே உள்ள மின்மயமாக்கப்பட்ட ரெயில் வழித்தடத்தில் மின்சார ரெயில் எஞ்சின் விரைவில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
அதன் பின்னர் ரெயில்வே பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்னர் போத்தனூர்- பொள்ளாச்சி இடையே மின்சார ரெயில்கள் இயங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story