தேன்கனிக்கோட்டை பகுதியில் உரிமம் இல்லாத 29 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் 20 பேர் கைது


தேன்கனிக்கோட்டை பகுதியில் உரிமம் இல்லாத 29 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் 20 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 5:58 PM GMT (Updated: 22 July 2021 5:58 PM GMT)

தேன்கனிக்கோட்டை துணைக்கோட்ட பகுதிகளில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 29 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராயக்கோட்டை:

நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
தேன்கனிக்கோட்டை போலீஸ் துணை கோட்ட பகுதிகளில் உரிமம் இல்லாத நாட்டு  துப்பாக்கிகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை துணை போலீ்ஸ் சூப்பிரண்டு கிருத்திகா, இன்ஸ்பெக்டர்கள் ராயக்கோட்டை சுப்பிரமணி, தேன்கனிக்கோட்டை சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், சிவராஜ், சரவணன், நாகமணி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் தேன்கனிக்கோட்டை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த தனிப்படையினர், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த 20 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 29 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இதையடுத்து கெலமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீஸ் அதிகாரிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:- 
தேன்கனிக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தளி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 நாட்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த சோதனையில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 29 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்போர் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். இந்த வேண்டுகோளை மீறும்பட்சத்தில், நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை போலீசார் கண்டுபிடித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார். 

Next Story