அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் கரூரில் உள்ள அவரது வீடுகள், அலுவலகங்கள் என 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கரூர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போதே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது. முதல் நடவடிக்கை அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது எடுக்கப்பட்டுள்ளது. இவர் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். இவர் தறிப்பட்டறை, சாயப்பட்டறை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.
லஞ்ச ஒழிப்பு சோதனை
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நேற்று காலை 8 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 100 போலீசார் சோதனை வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சாய் கிருபா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, மேற்கு மாம்பலம் கோகுலம் காலனியில் உள்ள டெடி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி அலுவலகம், பெருங்களத்தூரில் உள்ள அவரது உதவியாளர் பாலசுப்பிரமணியனின் வீடு ஆகிய 3 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் விஜயபாஸ்கர்
சோதனை நடத்தப்பட்ட போது, விஜயபாஸ்கர் அவரது சென்னை வீட்டில் இருந்தார். அவரது முன்னிலையில்தான் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வக்கீல் செல்வம் அவரை சந்தித்து பேசினார்.
பின்னர் வெளியில் வந்த வக்கீல் செல்வம், ‘விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது வருமானம் மற்றும் வாங்கப்பட்ட சொத்துகள் பற்றிய கணக்குகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டனர். அதற்கு முறையான கணக்கு உள்ளது. அந்த விவரங்களை விஜயபாஸ்கர் தெரிவித்தார். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது’ என்று கூறினார்.
நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னையில் சோதனை நடந்த விஜயபாஸ்கரின் வீட்டுக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் சென்றனர். சோதனை மாலையிலும் நீடித்தது.
கரூரில் 22 இடங்களில்...
கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 22 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் சென்னை, ஈரோடு, கோவை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டவர்கள், 10-க்கும் அதிகமான வாகனங்களில் கரூர் வந்தனர்.
அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை 6.30 மணியளவில் கரூர் சரஸ்வதி நகரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, செல்வ நகரில் உள்ள வீடு, சாயப்பட்டறை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஒவ்வொரு அறையிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் ரெயின்போ நகரில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான ராமானுஜர் நகரில் உள்ள கே.சி.பரமசிவம் வீடு, முன்னாள் கவுன்சிலர் தோரணக்கல்பட்டியில் உள்ள ஏகாம்பரம் வீடு, ஆட்டையம்பரப்புவில் உள்ள சேகர் வீடு, உதவியாளர்கள் செங்குந்தபுரத்தில் உள்ள கார்த்தி வீடு, உப்பிடமங்கலத்தில் உள்ள ரமேஷ் வீடு, வடிவேல்நகர் மில்கேட்டில் உள்ள தறிப்பட்டறை, க.பரமத்தி கல்குவாரி, கரூர் அம்பாள் நகரில் உள்ள உறவினர் வீடு, ஈசநத்தத்தில் உள்ள ஆதரவாளர் வீடு உள்பட 22 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்லவும், உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
வாக்குவாதம்
சிறிது நேரத்திற்கு பிறகு உணவு பொட்டலங்கள் மற்றும் பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களுடன் வெளியே சென்றுவிட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கரின் செல்வநகர் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திரும்ப வந்தனர்.
அப்போது அவர்களது வாகனத்தை சோதனையிட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என அ.தி.மு.க. நிர்வாகிகள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
போலீசார் குவிப்பு
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் தகவல் அறிந்ததும் அந்தந்த பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர்.
இதனால் அந்த பகுதிகளில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் செல்வ நகரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சாயப்பட்டறை முன் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சாயப்பட்டறைக்கு செல்லும் வழியில் போலீசார் பேரிகார்டுகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கரூரில் 15 மணிநேரமாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு 9.15 மணிக்கு முடிவடைந்தது. அதிகாரிகள் சோதனையை முடித்து செல்லும்போது பல்வேறு ஆவணங்களை எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story