311 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 5 பேர் கைது


311 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 8:08 PM GMT (Updated: 2021-07-23T01:38:37+05:30)

சேலத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 311 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்
சேலத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 311 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை பொருட்கள்
சேலம் செவ்வாய்பேட்டை தேர்முட்டி பகுதியில் ஒரு பீடா கடையில் புகையிலை பொருட்கள் விற்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஜெயசீலகுமார் மற்றும் போலீசார் அந்த பீடா கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு 15 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்ததுடன், கடையின் உரிமையாளர் சேதுராமன் (வயது 50) என்பவரை கைது செய்தனர்.
பறிமுதல்
அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் மனோகர்சிங் என்பவரது குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதவிர புகையிலை பொருட்கள் பதுக்கி விற்றதாக அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் (35), செவ்வாய்பேட்டை பஜார் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (35), அர்ஜூன் சிங் (35) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5 பேர் கைது
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சீலநாயக்கன்பட்டி பகுதியில் மனோகர்சிங் என்பவரது குடோனில் இருந்துதான் கடைகளுக்கு புகையிலை பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. புகையிலை பொருட்கள் விற்றதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடோன் உரிமையாளர் மனோகர்சிங்கை தேடி வருகிறோம்.
மொத்தம் 311 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. வேறு எங்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? வேறு இடங்களில் புகையிலை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story