குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் 4 பேர் மீது வழக்கு

குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்  4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 July 2021 8:08 PM GMT (Updated: 22 July 2021 8:08 PM GMT)

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.14 லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.14¾ லட்சம் மோசடி:
குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்  4 பேர் மீது வழக்கு
லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
சேலம், ஜூலை.23-
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.14 லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயனாளிகள் தேர்வு
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் நகர்ப்புற பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் மல்லம்மூப்பம்பட்டியை சேர்ந்த துரைசாமி, வெற்றிவேல், அமானி அரியபெருமாம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கருங்கல்பட்டியை சேர்ந்த சிவகுமார், பாக்கியம், மல்லிகா, ரோஸ்லின் ஆகிய 7 பேர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டி கொடுக்கப்பட்டது.
4 பேர் மீது வழக்கு
7 பேருக்கும் அரசு அளிக்க வேண்டிய மானியம் தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம், அதாவது ரூ.14 லட்சத்து 70 ஆயிரத்தை அதிகாரிகள் சிலர் மோசடி செய்து விட்டதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அரசு மானியம் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சேலம் குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெயந்திமாலா, உதவி பொறியாளர்கள் சரவணன், சீனிவாசன் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மேல் விசாரணை நடந்து வருகிறது.

Next Story