கூட்டுறவு சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை


கூட்டுறவு சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 23 July 2021 2:05 AM IST (Updated: 23 July 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே கூட்டுறவு சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சுரண்டை:
சுரண்டை அருகே கூட்டுறவு சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொதுமக்கள் முற்றுகை

சுரண்டை அருகே ரெட்டைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். இந்த நிலையில் உரிய ஆவணம் இல்லாமல் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் கடன் வழங்க முயற்சிப்பதாக கூறி இரட்டைகுளம் கூட்டுறவு சங்கத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்ததும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தர்மராஜ், சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையான ஆவணங்கள் வழங்குபவர்களுக்கு மட்டுமே விவசாய கடன் வழங்கப்படும் எனவும், இந்த கூட்டுறவு வங்கியின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கலுக்கு மட்டும் விவசாய கடன் வழங்க வேண்டும் என பொதுமக்கள் முன்னிலையில் உறுதி செய்யப்பட்டது.

உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை

மேலும் கூட்டுறவு துறை அதிகாரிகள் நடத்திய உடனடி கள ஆய்வில் நிர்வாக குழு உறுப்பினர்கள் 8 பேர் சிறு வணிக கடன் ரூ.25 ஆயிரம் வாங்கி விட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் திரும்ப செலுத்தவில்லை. அவர்களுக்கு தபால் மூலம் தகவல் அனுப்பியும் கடனை செலுத்தவில்லை. இதனால் நிர்வாக குழு தகுதியிழப்பிற்கு உள்ளாகியுள்ளது. எனவே நிர்வாக குழுவை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசி முடிவு எடுக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story