ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.13¾ லட்சம் மோசடி


ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.13¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 23 July 2021 2:30 AM IST (Updated: 23 July 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரெயில்வேயில் வேலை
நாகர்கோவில் இருளப்பபுரம், காமராஜ் சாலையை சேர்ந்தவர் ரெமி கிளார்சன் (வயது 30). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் படித்துவிட்டு வேலை தேடி வந்தேன். அப்போது எனது தாயாரிடம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையை சேர்ந்த பஷீர் (51) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் எனது தாயாரிடம் உங்களது மகனுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார். மேலும் பறக்கையை சேர்ந்த ராஜகுமார் என்ற        நலம்குமாரை அ.தி.மு.க. பிரமுகர் என்றும், அவர் சென்னை தலைமை செயலகத்தில் அப்போதைய முதல்-அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருவதாகவும் கூறி அவரை என் தாயாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ரெயில்வேயில் வேலை வாங்கி தர ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். இதை நம்பி என் தாயார் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார்.
வழக்கு பதிவு
மேலும் பல்வேறு தவணைகளில் வங்கி கணக்கு மூலம் மொத்தம் ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு நேர்முக தேர்வு இருப்பதாக கூறி நேர்முக தேர்வுக்கான கடிதத்தை அவர்கள் தந்தனர். அது தொடர்பாக விசாரித்து பார்த்தபோது அது போலி நேர்முகத்தேர்வுக்கான கடிதம் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் பணத்தை திரும்ப தராமல் அவர்கள் மோசடி செய்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். இதுதொடர்பாக பஷீர், ராஜகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்ட 2 பேர் மீதும் ஏற்கனவே மோசடி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story