ரூ.45 லட்சம் வரையிலான வீடுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் குறைப்பு; கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
கர்நாடகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ரூ.45 லட்சம் வரை உள்ள வீடுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் 3 சதவீதமாக குறைக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ரூ.45 லட்சம் வரை உள்ள வீடுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணம் 3 சதவீதமாக குறைக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 லட்சம் வீடுகள்
முதல்-மந்திரி எடியூரப்பா பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டம்-போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-
வீட்டு வசதித்துறையில் உள்ள பல்வேறு திட்டங்களின் கீழ் கிராமங்களில் 4 லட்சம் வீடுகளும், நகரங்களில் ஒரு லட்சம் வீடுகளும் என மொத்தம் 5 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. மொத்தம் ரூ.8 ஆயிரம் கோடி இதற்காக நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து மூலம் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வீடுகள் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.
முத்திரைத்தாள் கட்டணம்
பெங்களூருவில் ஒரு லட்சம் அடுக்குமாடி வீடுகள் கட்டும் திட்டத்தில் அடிப்படை கட்டுமான பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. விவசாய பல்கலைக்கழகத்தில் புத்தாக்க மையம் ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ரூ.110 கோடி செலவு ஆகிறது. உயர்ந்த சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளோம்.
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளோம். அடுக்குமாடி குடியிருப்புகளில் ரூ.35 லட்சம் முதல் 45 லட்சம் வரை உள்ள வீடுகள் பத்திரப்பதிவு செய்யும்போது வசூலிக்கப்படும் முத்திரைத்தாள் கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைத்துள்ளோம்.
புற்றுநோய் சிகிச்சை மையம்
உப்பள்ளியில் 2 ஏக்கர் நிலத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோரமங்களா-சல்லகட்டா அதாவது கே.சி.வேலி திட்டத்தில் கால்வாய்களை மேம்படுத்த ரூ.718 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவமொக்கா அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ரூ.50 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்கப்படும். தாவணகெரே மாவட்டம் ஹொன்னாலி தொகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
எடியூரப்பாவிடம் மந்திரிகள் ஆதங்கம்
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முடிந்த பிறகு எடியூரப்பாவை அவரது அலுவலகத்தில் மந்திரிகள் சுதாகர், பைரதி பசவராஜ், எம்.டி.பி. நாகராஜ், சிவராம் ஹெப்பார், பி.சி.பட்டீல், எஸ்.டி.சோமசேகர் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள், நீங்கள் பதவி விலகினால் உங்களை நம்பி பா.ஜனதாவுக்கு வந்த எங்களின் அரசியல் எதிர்காலம் என்ன என்று எடியூரப்பாவிடம் ஆதங்கத்துடன் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு எடியூரப்பா, உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இருக்காது என்று உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைய காரணமாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story