விருப்ப ஓய்வு சான்றிதழ் வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்; கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரி கைது
கோலாரில், அரசு பஸ் டிரைவருக்கு விருப்ப ஓய்வு சான்றிதழ் வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரை ஊழல் தடுப்பு படையினர் கையும், களவுமாக பிடித்தனர்.
கோலார்: கோலாரில், அரசு பஸ் டிரைவருக்கு விருப்ப ஓய்வு சான்றிதழ் வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரை ஊழல் தடுப்பு படையினர் கையும், களவுமாக பிடித்தனர்.
விருப்ப ஓய்வு சான்றிதழ்
கோலார் நகரில் உள்ள ரெயில்வே குடியிருப்பில் வசதித்து வருபவர் வெங்கடாசலபதி. இவர் கே.எஸ்.ஆர்.டி.சி.யில் டிரைவர் மற்றும் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக விருப்ப ஓய்வு பெற முடிவு செய்து உரிய ஆவணங்களுடன் கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார். விருப்ப ஒய்வு அனுமதி சான்றிதழ் கொடுக்க ரூ.50 ஆயிரம் லட்சம் கொடுக்கவேண்டும் என்று அதிகாரி பீரப்பா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலபதி, பணத்துடன் வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். பின்னர், சான்றிதழ் கொடுக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டது குறித்து வெங்கடாசலபதி மாவட்ட ஊழல் தடுப்பு படை அதிகாரிகளிடம் புகார் கூறினார்.
கைது
அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் வெங்கடாசலபதியிடம் கொடுத்து அதை கே.எஸ்.ஆர்.டி.சி. அதிகாரி பீரப்பாவிடம் வழங்குமாறு கூறினர். அதன்படி ரொக்கப்பணத்தை சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் வைத்து அதிகாரி பீரப்பாவிடம், வெங்கடாசலபதி கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்ப படை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய பீரப்பாவை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் ஊழல் தடுப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story