சாலையை கடந்து செல்ல முயன்றபோது கார் மோதி காவலாளி பலி - மருத்துவ கல்லூரி மாணவர் கைது


சாலையை கடந்து செல்ல முயன்றபோது கார் மோதி காவலாளி பலி - மருத்துவ கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 23 July 2021 6:04 AM GMT (Updated: 2021-07-23T11:34:39+05:30)

சாலையை கடந்து செல்ல முயன்றபோது கார் மோதி காவலாளி பலியானார். இது தொடர்பாக மருத்துவ கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

சென்னை போரூர், ஜெயா நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 60). இவர், போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று காலை மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது போரூரை நோக்கி வேகமாக வந்த கார், கஜேந்திரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த நியூமன் (20) என்பவரை கைது செய்தனர். இவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருகிறார்.

திருவள்ளூர் அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் அசோகன் (43). இவர், கோவூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் கோவூர் அருகே சென்றபோது பின்னால் வந்த வேன் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அசோகன், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் முகமது உசேன் (29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story