சாகுபடியை அதிகரிக்க மானியத்திட்டம்
மடத்துக்குளம் பகுதியில் வெப்ப மண்டலப் பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் மானியத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்
போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் வெப்ப மண்டலப் பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் மானியத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேசிய வேளாண் வளச்சித் திட்டம்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னை, நெல், கரும்பு, மக்காச்சோளம் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் வெப்ப மண்டல பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சாகுபடியை அதிகரிக்கும் நோக்கத்தில் பல்வேறு மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மடத்துக்குளம் வட்டாரத்துக்கு 2021 22 நிதி ஆண்டுக்காக ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காய்கறிகள் மற்றும் வெப்ப மண்டலப் பழ வகை மரங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக மானியங்கள் வழங்கப்படவுள்ளது. இதில் காய்கறிகள் அதிகம் பயிரிடப்படாத கிராமங்களில் புதிதாக காய்கறி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒரு ஏக்கருக்கு ரூ.12 ஆயிரத்து 800 வழங்கப்படவுள்ளது.
அதன்படி 5 ஏக்கருக்கு ரூ.64 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இதற்கென மொத்தம் 375 ஏக்கருக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. அதன்படி 50 ஏக்கருக்கு ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் முருங்கை பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கென 10 ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெப்ப மண்டலப் பழ வகைகள்
இதுதவிர விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பல வகைகளிலும் உறுதுணையாக இருக்கக்கூடிய பனை மரங்களின் சாகுபடியை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ஏக்கருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படவுள்ளது. இதற்கென 125 ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெப்ப மண்டலப்பழ வகைகளான அத்தி, கொடுக்காப்புளி, இலந்தை, நாவல், விளாம்பழம் போன்ற பழ வகைகளை நடவு செய்ய ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டங்கள் அனைத்திலும் மானிய மதிப்பில் விவசாயிகளுக்கு விதைகள், நாற்றுகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளது.
இதுதவிர பந்தல் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக பாகல், புடலை, பீர்க்கன், சுரைக்காய் போன்ற காய்கறிகள் சாகுபடி செய்யும் வகையில் நிரந்தர பந்தல் அமைப்பதற்கு ஏக்கருக்கு 80 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு 7 ஏக்கருக்கு ரூ.6 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரை ஏக்கரில் பந்தல் அமைக்க விரும்பும் விவசாயியும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
---
மடத்துக்குளம் பகுதியில் பந்தல் சாகுபடியில் பீர்க்கங்காய்.
----
Related Tags :
Next Story