பூச்சிக்கொல்லிகளை கவனமாக கையாளுங்கள்


பூச்சிக்கொல்லிகளை கவனமாக கையாளுங்கள்
x
தினத்தந்தி 23 July 2021 1:06 PM GMT (Updated: 2021-07-23T18:36:48+05:30)

பூச்சிக்கொல்லி மருந்துகளை கவனமாக கையாளாவிட்டால் ஆபத்து என்று தோட்டக்கலைத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போடிப்பட்டி
பூச்சிக்கொல்லி மருந்துகளை கவனமாக கையாளாவிட்டால் ஆபத்து என்று தோட்டக்கலைத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கூறியதாவது
பாதுகாப்பு வழிமுறைகள்
பூச்சிக்கொல்லிகளை தகுந்த நேரத்தில், சிறந்த கட்டுப்பாட்டு திறன் கிடைக்கும் சமயத்தில் உபயோகிப்பது சிறந்தது. வேகமான காற்று மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது. அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சி கொல்லிகள் மட்டுமே பூச்சிகளை கட்டுப்படுத்தும் என்பது தவறான எண்ணமாகும். பூச்சிகளின் பருவம், தன்மை போன்றவற்றை அறிந்து வேளாண், தோட்டக்கலைத்துறையினரின் ஆலோசனை பெற்று குறைந்த நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை, பரிந்துரை செய்த அளவில் பயன்படுத்த, பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.
அதேநேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அதன்படி மருந்து வாங்கியவுடன் அதனுடன் கொடுத்துள்ள வழிமுறைகளை கவனமாக படித்துஅதன்படி பயன்படுத்த வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற நபர்கள் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் மற்றும் காலணிகளை அணிந்தே மருந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளிக்கும் இடத்துக்கு அருகில் சுத்தமான நீர் மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும். 
சுத்தம் செய்ய வேண்டும்
தற்செயலாக உடலிலோ, கைகளிலோ மருந்து பட்டு விட்டால் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.மருந்துகளை வேறு பாட்டில்களில் மாற்றி வைப்பது ஆபத்தானது. காலியான மருந்து பாட்டில்களை புதைத்து விட வேண்டும். பூட்டப்பட்டுள்ள அறைக்குள் மருந்துகளை தெளிப்பதோ, தூவுவதோ கூடாது.பூச்சி மருந்துகளை இருப்பு வைத்துள்ள அறைக்குள் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.மேலும் மருந்து தெளிக்கும்போது உணவு உண்ணவோ, நீர் அருந்தவோ கூடாது.
மருந்து கலக்கும்போதும் தெளிக்கும்போதும் காற்றின் திசையிலேயே தெளிக்க வேண்டும். தெளிப்பான்களில் அடைப்பு ஏற்பட்டால் வாயால் ஊதக்கூடாது.மருந்து தெளிக்கும் போது அருகிலுள்ள பயிர்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்களில் மருந்துகள் கலக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.தெளிப்பவர் உடலில் காயங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உதவியாளர் ஒருவரை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். மருந்து தெளித்து முடித்தவுடன் சோப்பு போட்டு குளித்து, ஆடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தெளிப்பான் பராமரிப்பு
அத்துடன் பயன்படுத்திய தெளிப்பான்கள் மற்றும் உபகரணங்களை உடனடியாக சுத்தம் செய்து வைக்க வேண்டும். மருந்து தெளித்தவுடன் தெளிப்பான்களை விசைத் தெளிப்பான்கள் தவிர தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.தெளிப்பான்களின் மூடி மற்றும் பிளாஸ்டி குழாய்களை திறந்து வைப்பதன் மூலம் ஈரத்தை உலரச் செய்யலாம். விசை தெளிப்பான்களை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் பெட்ரோல் கலனை காலி செய்து வைக்க வேண்டும். கார்புரேட்டரிலும் பெட்ரோல் குழாய்களிலும் பெட்ரோலை தங்க விடக்கூடாது. 
மருந்து அடிக்கும் வேலை இல்லாத நாட்களில் முக்கியமான பாகங்களுக்கு எண்ணெய் இட்டு பராமரிக்க வேண்டும். தெளிப்பான்களை பயனப்டுத்துவதற்கு முன் நன்கு பரிசோதித்து கசிவுகள் இல்லாத வண்ணம் சரி செய்து அதன் பிறகு பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும். எனவே முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகள் மற்றும் தெளிப்பான்களைக் கையாள வேண்டும்'என்று அவர் கூறினார்.
-

Next Story