அமராவதி அணை நிரம்பியது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தளி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணை
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரம் அடைந்தால் மட்டுமே அமராவதி அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதற்கு வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு உதவிகரமாக இருந்து வருகிறது. அப்போது வனப்பகுதியில் நீர் வழித்தடங்களில் தேங்கியுள்ள மூலிகைகள் வெள்ளப்பெருக்கால் அணைப் பகுதிக்கு அடித்து வரப்படுகிறது. இதனால் அணையில் தேங்கியுள்ள தண்ணீர் இயல்பாகவே சுவையுடையதாக திகழ்கிறது. ஆண்டுதோறும் ஏற்படுகின்ற வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை மற்றும் புயல் மழையின் போது அணை அதிகப்படியான நீர் வரத்தை பெற்று வருகின்றது. இந்த சூழலில் வனப்பகுதியில் மழை தீவிரமடைந்ததால் கடந்த வாரத்தில் இருந்து அணையின் நீராதாரங்களில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் இருப்பும் படிப்படியாக உயர்ந்து நேற்று அதிகாலை 85 அடியை கடந்தது. நீர்வரத்தும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கும் மேலாக இருந்து வந்ததால் உபரி நீர் திறப்பதற்கான சூழலும் நிலவியது.இதன் காரணமாக அங்கு பதட்டம் நிலவி வந்தது.
உபரி நீர் திறப்பு
அதைத்தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவிப்பொறியாளர் பாபுசபரீஸ்வரன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப்பகுதியில் முகாமிட்டு வந்தனர்.மேலும் அமராவதி ஆற்றின் கரையோரம் வசித்து வருகின்ற பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் நேற்று காலை விடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அணையில் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை கருவி மூலம் ஒலியும் எழுப்பப்பட்டது. இதனால் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சூழலில் நேற்று மாலை 6 மணி அளவில் அணை நீர்மட்டம் 87.34 அடியை கடந்தது. அதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது.மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவி வருகிறது.இதனால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர் வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையின் மொத்த நீர்ப்பரப்பில் 87.34அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5449 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 3300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
-
Related Tags :
Next Story