நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குறுவை பயிர்கள் கருகும் அபாயம் விவசாயிகள் வேதனை


நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குறுவை பயிர்கள் கருகும் அபாயம் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 23 July 2021 2:45 PM GMT (Updated: 2021-07-23T20:15:26+05:30)

நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குறுவை பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

நீடாமங்கலம், 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோரையாறு பாசனத்திற்கு உட்பட்ட புதுதேவங்குடி, அரிச்சபுரம், கீழாளவந்தசேரி, மேலாளவந்தசேரி ஆகிய வருவாய் கிராமங்களில் கோரையாற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது பல நாட்களாக கோரையாற்றில் தண்ணீர் வராததால் வயலில் நட்ட பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இதனால் ஆயிரம் ஏக்கர் பாதிப்படையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஆற்றில் தண்ணீரின்றி கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற தேவயைான தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து புதுதேவங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் கூறுகையில்,

‘குறுவை பயிர்களை காப்பாற்ற தேவையான தண்ணீரை கோரையாற்றில் விடுவித்து விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து செய்த குறுவை சாகுபடி பயிர்கள் வறண்டு கருகுவதைக்கண்டு விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்’ என்றார்.

இதேபோல் நீடாமங்கலம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆதிஜனகர் ஆகியோர் கூறுகையில், ‘வெண்ணாறு பாசனத்தில் பிரியும் சாமந்தன் காவிரி வாய்க்கால் மூலம் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் தற்போது குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது.

ஆற்றுப்பாசனத்தை நம்பி தான் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது ஆறுகளில் தண்ணீர் வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் கருகும்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தேவையான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story