நீலகிரியில் தொடர்மழை நிவாரண முகாம்களில் 99 பேர் தங்க வைப்பு


நீலகிரியில் தொடர்மழை நிவாரண முகாம்களில் 99 பேர் தங்க வைப்பு
x
தினத்தந்தி 23 July 2021 10:12 PM IST (Updated: 23 July 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் தொடர்மழை பெய்து வருவதால் 99 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டி

நீலகிரியில் தொடர்மழை பெய்து வருவதால் 99 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

குழுவினர் கண்காணிப்பு

நீலகிரி மாவட்டத்தில் கனமழை தீவிரமடைந்து உள்ளது. ஒரே நாளில் 1,669 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் நிலச்சரிவு ஏற்பட கூடிய அபாயகரமான 283 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.

அங்கு பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய 42 மண்டல குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. 

99 பேர் தங்க வைப்பு 

தொடர் மழை பெய்து வருவதால் நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். குன்னூர் முகாமில் 4 குழந்தைகள் உள்பட 28 பேர், கூடலூர் புத்தூர் வயலில் 25 குழந்தைகள் உள்பட 71 பேர் என மொத்தம் 99 பேர் தங்கி உள்ளனர்.  

அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. வெள்ளப்பெருக்கு மற்றும் வீடுகள் இடியும் நிலையில் உள்ளவர்கள் முன்கூட்டியே பாதுகாப்பு மையங்களுக்கு வரவேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கலெக்டர்இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-  

பேரிடர் மீட்பு படை

நீலகிரியில் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆங்காங்கே மரங்கள் விழுதல், மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.

 நெடுஞ்சாலைகளில் மரம் அறுக்கும் எந்திரங்கள் மூலம் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு வருகிறது. பொக்லைன் எந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாதிப்பு அதிகமாக இல்லை. 

இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை 2 குழுவினர் வருகின்றனர். ஊட்டிக்கு ஒரு குழு, கூடலூருக்கு ஒரு குழு அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்கள் பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். 

இரவில் மழை அதிகமாக இருப்பதால் பகுதி சேதம் மற்றும் இடிந்த வீடுகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் அபாயகரமான இடங்களில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு வருமாறு கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 


Next Story