உடைந்து காணப்படும் பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


உடைந்து காணப்படும் பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 23 July 2021 10:14 PM IST (Updated: 23 July 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உடைந்து காணப்படும் பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நகரில் ஆங்காங்கே ஆள்நுழைவு தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் உடைந்து சாலைகள் உள்வாங்குகின்றன.

மயிலாடுதுறை நகரில் ஆள்நுழைவு தொட்டிகள் 16 இடங்களில் உடைந்து சேதமடைந்து சீரமைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரி மாதம் 16-வது இடமாக தரங்கம்பாடி சாலையில் ஆள்நுழைவு தொட்டி உடைந்து உள்வாங்கிய போது அங்கு பாதாள சாக்கடை குழாய் சீரமைக்கப்பட்டு அதன் மேல் மண் கொட்டப்பட்டு ஜல்லிகள் போடப்பட்டு சீரமைக்கப்பட்டன. ஆனால் அதன் மீது தற்போது வரை தார்சாலை அமைக்கப்படவில்லை.

இதேபோல தரங்கம்பாடி சாலையில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை உள்வாங்கி சீரமைக்கப்பட்டு அந்த பகுதிகளில் தற்போது வரை தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நகரின் பிரதான சாலையான காந்திஜி சாலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சீரமைக்கப்பட்ட பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியின் மேல்பகுதி மூடி உடைந்து சாலை உள்வாங்கியுள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் வழி தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் இந்த காந்திஜி சாலையில் தான் செல்கின்றன. மேலும் நகரின் மையப்பகுதி என்பதால் இந்த சாலையில் கார், மோட்டார் சைக்கிள் உள்பட கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியின் மூடி உடைந்துள்ளதால் அதன் மீது வாகனங்கள் ஏறிச்சென்று விபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

எனவே காந்திஜி சாலையில் ஆள்நுழைவு தொட்டியின் மூடி உடைந்துள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story