கூடலூர் அருகே புலி நடமாட்டம் 7 இடங்களில் கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு


கூடலூர் அருகே புலி நடமாட்டம்  7 இடங்களில் கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு
x
தினத்தந்தி 23 July 2021 4:55 PM GMT (Updated: 23 July 2021 4:55 PM GMT)

கூடலூர் அருகே புலி நடமாட்டத்தை தொடர்ந்து 7 இடங்களில் கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கூடலூர்

கூடலூர் அருகே புலி நடமாட்டத்தை தொடர்ந்து 7 இடங்களில் கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பசுமாடுகளை கொன்ற புலி

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட தேவன் கிராமத்தில் கடந்த 2 தினங்களாக 3 பசுமாடுகளை புலி கடித்து கொன்றது. இதைக்கண்ட கிராம மக்கள் அப்பகுதியில் புலி பதுங்கி இருப்பதை கண்டனர்.

 இதைத்தொடர்ந்து அதை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் புதருக்குள் மறைந்து இருந்த புலி அங்கிருந்து வெளியேறி தேயிலைத் தோட்டம் வழியாக தப்பித்தது. 

இச்சம்பவம் குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியது. மேலும் பசுமாடுகளை கொன்ற புலியால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். 

7 இடங்களில் கேமராக்கள்

இந்த நிலையில் ஊருக்குள் புகுந்த புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் உணவு கிடைக்காதபோது பொது மக்களைத் தாக்கும் அபாயமும் இருந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து புலி நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறை யினர் பட்டாசுகளை வெடித்தனர். தொடர்ந்து தேவன் கிராமத்தை சுற்றிலும் 7 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணியில்  ஈடுபட்டனர்.

 முன்னதாக தேவர்சோலை போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். பின்னர் கிராம மக்களிடம் வனத்துறையினர் கூறியதாவது:-

தீவிர கண்காணிப்பு 

புலி நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் தனியாக நடந்து செல்லக் கூடாது. மேலும் கால்நடைகளை தேடி புலி ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளதால் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப் பட்டு வருகிறது.

 எனவே தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கூட்டமாக நின்று பச்சை தேயிலை பறிக்க வேண்டும். புலி நடமாட்டம் குறித்து கேமராக்களில் பதிவானால் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story