அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
திண்டுக்கல் :
ஆடி மாதம்
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு காலையில் பால் அபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து பகல் 12 மணி அளவில் பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னர் வேண்டுதல் நிறைவேற்றப்பட்டவர்கள் அம்மனுக்கு கூழ் படைத்து அதை பிரசாதமாக வழங்கினர். இதில், சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அரசு வழிகாட்டுதலை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அபிராமி அம்மன் கோவில்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை மற்றும் பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவில், மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவில், ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், நாகல்நகர் மாதா புவனேஸ்வரி அம்மன் கோவில், பகவதியம்மன் கோவில், மெங்கில்ஸ் ரோடு நாகம்மாள் கோவில், வி.எம்.ஆர்.பட்டி காளியம்மன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
பழனி, கொடைக்கானல்
பழனி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. குறிப்பாக பழனி மாரியம்மன் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், ரணகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பெண் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அண்ணாநகரில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில், டெப்போ பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில், பாம்பார்புரத்தில் உள்ள காளியம்மன் கோவில், நாயுடுபுரத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர்.
வேடசந்தூர் அய்யனார் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. துர்க்கையம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நத்தம்
நத்தம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நத்தத்தில் உள்ள பகவதி அம்மன், காளியம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பட்டிவீரன்பட்டி அண்ணாநகரில் உள்ள சுயம்பு நாகேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story