கள்ளக்குறிச்சி சங்கராபுரம் தியாகதுருகம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 வியாபாரிகள் கைது


கள்ளக்குறிச்சி சங்கராபுரம் தியாகதுருகம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 வியாபாரிகள் கைது
x
தினத்தந்தி 23 July 2021 5:33 PM GMT (Updated: 23 July 2021 5:33 PM GMT)

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் தியாகதுருகம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 வியாபாரிகளை கைதுசெய்த போலீசார் 2 மளிகை கடைகளுக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி

வெற்றிலை வியாபாரி

கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள வெற்றிலை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் முகமதுயாசின்(35) என்பவரின் வெற்றிலை கடையில் சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்காக 870 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து முகமது யாசினை கைது செய்த போலீசார் புகையிலை பாக்கெட்களையும் பறிமுதல் செய்தனர்.

மளிகை கடை

அதேபோல் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மேற்பார்வையில், சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால், மண்டல துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை ஆகியோர் புதுப்பாலப்பட்டு கிராமத்தில் உள்ள கனகசபை மகன் சுபாஷ்(வயது 63) என்பவரின் மளிகை கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சோதனையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சுமார் 10 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடைக்கு சீல் வைத்த போலீசார் உரிமையாளர் சுபாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தியாகதுருகம்

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபாலுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ்காரர்கள் சீனிவாசன், சிவமுருகன் ஆகியோர் சூளாங்குறிச்சி கிராமத்தில் குணசேகரன்(வயது 52) என்பவரின் மளிகை கடை மற்றும் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 28 கிலோ புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் குணசேகரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 28 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மளிகை கடைக்கு சீல் வைத்தார்.


Next Story