தொடரும் மணல் கொள்ளை


தொடரும் மணல் கொள்ளை
x
தினத்தந்தி 23 July 2021 8:03 PM GMT (Updated: 23 July 2021 8:05 PM GMT)

மங்களமேடு பகுதியில் தொடரும் மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த திருவாலந்துறை, கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிகாடு ஆடுதுறை, ஒகளூர், அத்தியூர், அகரம்சீகூர், வசிஷ்டபுரம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளாற்றில் இருந்து இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல் டிராக்டர் மற்றும் டயர் வண்டிகள் மூலம் தினமும் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறது. வாகனங்கள் மூலம் கடத்தி செல்லப்படும் மணலை ஒரு இடத்தில் குவித்து வைத்து, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 
இதில் திருவாலந்துறை முதல் வசிஷ்டபுரம் ஊராட்சி வரை வெள்ளாற்றின் கரையோர கிராமங்களின் அருகே நடக்கும் இந்த மணல் கொள்ளையை பற்றி பொதுமக்கள் புகார் அளித்தாலும், அதிகாரிகள் மணல் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.
அதிகாரிகள் ஏமாற்றம்
அதிகாரிகள் சோதனைக்கு வருவது குறித்து, சிலர் மணல் கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்து தப்பிக்க வைத்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால், சோதனைக்கு செல்லும் அதிகாரிகள், மணல் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
மேலும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பவர்களின் விவரம் பற்றியும், மர்ம நபர்கள் மணல் கொள்ளையர்களுக்கு தெரிவித்து விடுகின்றனர். இதனால் மணல் கொள்ளை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குன்னம் தாலுகாவிக்கு உட்பட்ட மங்களமேடு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story