சேலம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


சேலம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 July 2021 1:54 AM IST (Updated: 24 July 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சேலம்.

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆடி முதல் வெள்ளி

தமிழகத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்று கருதி அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் அம்மனை வேண்டி பெண்கள் விரதம் இருந்து வழிபடுவார்கள்.
அதன்படி நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோட்டை மாரியம்மன்
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.
ஒருசில பக்தர்கள் ராகி கூழ், சர்க்கரை பொங்கல், அன்னதானம், மாவு போன்ற பிரசாரத்தை அம்மனுக்கு படைத்து அதன்பிறகு அதனை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு வினியோகம் செய்தனர். ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அம்மன் கோவில்களில்
இதேபோல் சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.
அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு மீனாட்சி அம்மன் அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. அன்னதானப்பட்டி தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், குகை மாரியம்மன், காளியம்மன் கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில், பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்பட மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
சிறப்பு பூஜைகள்
இதேபோல், எடப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, ஓமலூர், தாரமங்கலம், மேட்டூர், வாழப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களிலும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

Related Tags :
Next Story