முன்னாள் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு


முன்னாள் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு
x
தினத்தந்தி 23 July 2021 8:42 PM GMT (Updated: 23 July 2021 8:42 PM GMT)

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வீடு, அவரது தாய் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.

பெரம்பலூர்:

லஞ்ச வழக்கில் கைதானவர்
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 43). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்தார். கடந்த 2019-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26-ந்தேதி விவசாயி ஒருவரிடம் வீட்டு சுவரின் அருகே செல்லும் மின்கம்பியை மாற்றியமைக்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரால் கையும், களவுமாக பிடித்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் போலீசார் மாணிக்கத்தின் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதானதை தொடர்ந்து துறைரீதியாக மாணிக்கம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் மாணிக்கம் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
சொத்து குவிப்பு
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில், மாணிக்கம் பணியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்தது தெரியவந்தது. இதையடுத்து மாணிக்கத்தின் மீது கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி சொத்து குவிப்பு வழக்கினை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்தனர்.
ஏற்கனவே பெரம்பலூர் தலைமை குற்றவியல் நடுவர்  சிறப்பு நீதிமன்றத்தில் மாணிக்கத்தின் மீது லஞ்சம் வாங்கிய வழக்கும் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது அதே நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
வீடுகளில் சோதனை
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு, அதனை கைப்பற்றுவதற்காக நேற்று மதியம் 2 மணியளவில் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள மாணிக்கத்தின் வீட்டில் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையிலான போலீசாரும், வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூரில் உள்ள அவரது தாய் லட்சுமி வீட்டில் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையிலான போலீசாரும் திடீரென வந்து சோதனையை தொடங்கினர்.
சோதனையின்போது பெரம்பலூர் வீட்டில் இருந்த மாணிக்கத்திடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதாகவும், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாகவும் கூறப்படுகிறது. 2 வீடுகளிலும் மதியம் ஒரே நேரத்தில் தொடங்கிய சோதனை மாலை 6 மணியளவில் முடிவடைந்தது.

Next Story