மின்சாரம் தாக்கி மாணவி சாவு


மின்சாரம் தாக்கி மாணவி சாவு
x
தினத்தந்தி 24 July 2021 2:28 AM IST (Updated: 24 July 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. மார்த்தாண்டம் பகுதியில் மின்சாரம் தாக்கி மாணவி பரிதாபமாக இறந்தார்.

குழித்துறை:
குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. மார்த்தாண்டம் பகுதியில் மின்சாரம் தாக்கி மாணவி பரிதாபமாக இறந்தார்.
பலத்த மழை
குமரி மாவட்டத்தில் கடந்த ஓரிரு தினங்களாகவே சாரல் மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. அதன்பிறகு நேற்று நாள் முழுவதும் மழை பெய்தது. 
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை 8 மணி அளவில் வெயில் அடித்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே சடசடவென பலத்த மழை பெய்தது. இதனால் காலையில் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் கையில் குடை பிடித்தபடி சென்றனர். இவ்வாறு நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். 
மின்சாரம் தாக்கி மாணவி சாவு
மார்த்தாண்டம் பகுதியிலும் சூறை காற்றுடன் மழை பெய்தது. மார்த்தாண்டம் வெட்டுமணி, வாணியன்விளையை      சேர்ந்தவர்         சுனில். இவர் வெட்டுமணியில் பத்திரம் எழுதி கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், அஷிகா (வயது 14) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். அஷிகா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று மாலை அஷிகா, தன்னுடைய பெரியம்மாவுடன் குழித்துறை ஆற்றங்கரை அருகே உள்ள தோட்டத்துக்கு பழைய பாலம் வழியாக நடந்து சென்றார். அப்போது வீசிய சூறை காற்றில் எதிர்பாராதவிதமாக மின்கம்பி ஒன்று அறுந்து அஷிகா மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அஷிகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மழை அளவு
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடி பகுதியில் 24 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. 
மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:-
பூதப்பாண்டி-8.4, களியல்-8, கன்னிமார்-3.8, கொட்டாரம்-15.8, குழித்துறை-10, நாகர்கோவில்-22, புத்தன்அணை-9.6, சுருளோடு-20, தக்கலை-6, குளச்சல்-8.6, இரணியல்-10.2, பாலமோர்-23.2, ஆரல்வாய்மொழி-10, கோழிப்போர்விளை-11, அடையாமடை-3, குருந்தன்கோடு-9.4, முள்ளங்கினாவிளை-13, ஆனைகிடங்கு-12.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
மேலும் அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-8.8, பெருஞ்சாணி-11, சிற்றார் 1-5.8, சிற்றார் 2-7.4, மாம்பழத்துறையாறு-12 மற்றும் முக்கடல்-11.6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. 
பழையாற்று கால்வாயில் தண்ணீர் அதிகளவு செல்வதால் நாகர்கோவிலில் உள்ள சபரி மற்றும் குமரி தடுப்பணைகளில் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

Next Story