மலைநாடு மாவட்டங்களில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: கொட்டகை இடிந்து விவசாயி பலி; 2 பசுமாடுகளும் செத்தன
மலைநாடு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்கமகளூருவில் கொட்டகை இடிந்து விழுந்து விவசாயி உயிரிழந்தார். 2 பசுமாடுகளும் செத்தன.
சிக்கமகளூரு: மலைநாடு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்கமகளூருவில் கொட்டகை இடிந்து விழுந்து விவசாயி உயிரிழந்தார். 2 பசுமாடுகளும் செத்தன.
தென்மேற்கு பருவமழை தீவிரம்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை இடைவிடாது கொட்டி வருகிறது. இதன்காரணமாக மலைநாடு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 2 மாவட்டங்களிலும் அதிகளவு மழை கொட்டுகிறது.
இதனால் இந்த மாவட்டங்களில் ஓடும் ஹேமாவதி, பத்ரா, துங்கா ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
தரைமட்ட பாலம் மூழ்கியது
பத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சிக்கமகளூரு மாவட்டம் கலசாவில் இருந்து ஒரநாடு அன்னப்பூர்ணேஸ்வரி கோவிலுக்கு செல்லும் வழியில் ஹெப்பாலே பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தை மூழ்கத்தடிப்படி தண்ணீர் செல்கிறது. இதனால் கலசா-ஒரநாடு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஹெப்பாலே பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதேபோல, பத்ரா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூர்-கலசா சாலையில் தண்ணீர் வந்துள்ளது. இதனால் அந்தப்பகுதியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர் கனமழையால் சிருங்கேரியில் இருந்து மங்களூருவுக்கு எஸ்.கே.பார்டர் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விவசாயி பலி
சிக்கமகளூரு அருகே கேத்தனபீடு கிராமத்தை சேர்ந்தவர் பசவேகவுடா (வயது 60). விவசாயி. நேற்று அந்தப்பகுதியில் இடைவிடாது பலத்த மழை கொட்டியதால், கொட்டகையில் கட்டியிருந்த 2 பசுமாடுகளை அவிழ்த்து வெளியே அழைத்து வருவதாக கொட்டகைக்குள் சென்றார். அவருடன் பசவேகவுடாவின் பேரன் பவனும் (2) சென்றுள்ளான். அந்த சமயத்தில் கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கொட்டகை இடிந்து விழுந்தது. அப்போது பவன் வெளியே ஓடி வந்து விட்டான். இதனால் பவன் அதிர்ஷ்டவசமா உயிர் தப்பினான்.
கொட்டகை இடிந்து விழுந்ததில் பசவேகவுடா இடிபாடுகளிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பசுமாடுகளும் பரிதாபமாக செத்தன. இதுபற்றிய தகவல் அறிந்ததும், சிக்கமகளூரு தாசில்தார் காந்தராஜ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், சிக்கமகளூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் உயிரிழந்த பசவேகவுடாவின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவுதாகவும் உறுதி அளித்தனர்.
இதேபோல, தரிகெரே தாலுகா துதிபேட்டை கிராமத்தை சேர்ந்த ரங்கப்பா, கொப்பா டவுனை சேர்ந்த கிருஷ்ணா ஆகியோரின் வீடும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாரும் வீட்டில் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மண்சரிவு
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெேரயில் உள்ள சார்மடி மலைப்பாதையிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த கனமழை காரணமாக சார்மடி மலைப்பாதையில் 7-வது வளைவில் லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், மக்களும் பீதியில் உள்ளனர். இந்த மண்சரிவை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்றொரு மலைநாடு மாவட்டான சிவமொக்காவிலும் தொடர்ந்து கனமழை கொட்டுகிறது. மாவட்டத்தில் சிவமொக்கா, தீர்த்தஹள்ளி, சாகர், ஒசநகர் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பலத்த மழை கொட்டுவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தீர்த்தஹள்ளி தாலுகா ஆகும்பேயில் 101 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
உப்பள்ளி-தார்வார்
இதேபோல, வடகர்நாடகத்தில் உள்ள உப்பள்ளி-தார்வார் மாவட்டத்திலும் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடுகிறது. உப்பள்ளி ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்துக்கு அடியில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளதால் உப்பள்ளி-கதக் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதேபோல மாவட்டத்தில் அல்னாவர், கல்கட்டகி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.
Related Tags :
Next Story