மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை; 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை


மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை; 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை
x
தினத்தந்தி 24 July 2021 2:55 AM IST (Updated: 24 July 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

கன்னட ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைசூரு: கன்னட ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

மைசூரு சாமுண்டி மலையில் புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கன்னட ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்படும். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். 

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கன்னட ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நடக்கும் பூஜைகளில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல, இந்த ஆண்டும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

3-வது வெள்ளிக்கிழமை

இந்த நிலையில் கன்னட ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கோவில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் வித, விதமான பூக்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 
கன்னட ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான நேற்றும் ஏராளமான பக்தர்கள் சாமுண்டி மலைக்கு வந்தனர். ஆனால், மலை அடிவாரத்தில் வைத்தே அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

3 நாட்கள் தடை

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, நேற்று கன்னட ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடைபெறும் என்பதாலும், வருகிற ஞாயிற்றுக்கிழமை சாமுண்டி மலையில் வர்தந்தி உற்சவம் (சாமுண்டீஸ்வரி அம்மன் பிறந்தநாள் விழா) கொண்டாடப்பட உள்ளது. இதன்காரணமாக நேற்று முதல் 25-ந்தேதி வரை 3 நாட்களுக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story