மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்


மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்
x

மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம் காணப்பட்டது.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது. கடல் அலைகள் வழக்கத்துக்கு மாறாக 5 அடி உயரத்திற்கு சீறி எழும்பின. ராட்சத அலைகள் 10 மீட்டர் தூரத்திற்கு கரைப்பகுதியை நோக்கி வந்தன. இதனால் குறிப்பிட்ட கரைப்பகுதி கடல் நீரால் சூழப்பட்டதால் கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகளை மேலும் மணல் பரப்பு பகுதி இல்லாததால் அதனை பத்திரப்படுத்தி வைத்து பாதுகாக்க மீனவர்கள் கடுமையாக போராடினர்.

இங்கு படிப்படியாக கடல் நீரால் சூழப்பட்டு மணல் பகுதி மறைந்து நீர் சூழந்த பகுதியாக மாறி வருகிறது. ராட்சத அலைகள் மணல் பகுதி வரை சீறி வருவதால் தங்கள் படகுகள் ராட்சத அலையில் அடித்து செல்லாமல் இருக்க மீனவர்கள் அங்குள்ள தூண்களிலும், கட்டிடங்களிலும் கயிறு மூலம் கட்டி பாதுகாத்து வருகின்றனர்.

அதேபோல் மீன்பிடி வலைகள் படகு என்ஜின் போன்றவைகளை மீனவர்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று பாதுகாத்தனர். மேலும் பலத்த காற்று, கடல் சீற்றம் காரணமாக கரைப்பகுதியில் மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் தங்கள் படகுகளை கரைப்பகுதிக்கு திருப்ப டிராக்டர் மூலம் கயிறு கட்டி பாதுகாப்பாக கரைப்பகுதிக்கு கொண்டு வந்தனர்.

நேற்று கடலுக்கு சென்ற மீனவர்கள் தாங்கள் வீசிய வலையில் போதிய மீன்கள் சிக்காததால் வெறும் படகுடன் கரைக்கு திரும்பியதை காண முடிந்தது. தற்போது அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக கடல் முன்னோக்கி வருவதும், பின்னர் சில நாட்கள் கழித்து கடல் பின்னோக்கி செல்வதுமாக படிப்படியாக இயற்கை சீற்றம் மாறி வருவதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கடல் சீற்றத்தில் இருந்து மாமல்லபுரம் மீனவர் பகுதி அதிக பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வாக உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் பாறை கற்கள் கொட்டி கடல் முன்னோக்கி வருவதை தடுத்து பாதுகாத்து வருவது போல் மாமல்லபுரம் மீனவர் பகுதியிலும் பாறை கற்கள் கொட்டி கடல் மேலும் முன்னோக்கி வருவதை தடுக்கும் வகையில் தமிழக மீன்வளத்துறை நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் அல்லது தூண்டில் வளைவு அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடல் சீற்றத்தால் மணல்பகுதி முழுவதும் கடல் நீரால் சூழப்பட்ட காரணத்தால் நேற்று காலை நேரத்தில் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கடல் நீர் மணற்பரப்பில் சீறி வந்ததால் தங்களால் நடக்க முடியாத காரணத்தால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதனால் சிலர் நடைபயிற்சி மேற்கொள்ளும் முயற்சியை கைவிட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

Next Story