ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 101 பவுன் தங்க நகை நூதன மோசடி - தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது போலீசில் புகார்


ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 101 பவுன் தங்க நகை நூதன மோசடி - தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 24 July 2021 6:19 AM GMT (Updated: 2021-07-24T11:49:29+05:30)

ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் 101 பவுன் தங்க நகையை நூதன முறையில் மோசடி செய்ததாக தனியார் நிதிநிறுவன மேலாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திருவொற்றியூர்,

சென்னை ராயபுரம் ஜீவரத்தினம் சாலையை சேர்ந்தவர் அலெக்ஸ். இவருடைய மனைவி ஆல்வின் (வயது 67). ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான இவர், அதே பகுதியில் பழைய தங்க நகைகளுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனத்தில், சொந்த தேவைக்காக தனது தங்க நகைகளை விற்று பணம் பெற்று வந்தார்.

அப்போது அந்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த பொன்னுசாமி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட் டது. அவர் ஆசிரியை ஆல்வினிடம், தங்களின் நகைகளை பாதுகாக்கும் ‘லாக்கர்’ எங்கள் நிறுவனத்தில் உள்ளது. அதில் நகைகளை வைத்தால் பத்திரமாக இருக்கும். அதற்கு வாடகை எதுவும் கட்டவேண்டாம் என்றார்.

அதை நம்பிய ஆல்வின், கடந்த 2019-ம் ஆண்டு தன்னிடம் இருந்த 101 பவுன் நகையை, பொன்னுசாமியிடம் கொடுத்தார். அவரும் ‘லாக்கரில்’ வைத்து அதற்கான ரசீதை மட்டும் ஆசிரியையிடம் கொடுத்துவிட்டு, ‘லாக்கர்’ சாவியை கொடுக்கவில்லை என தெரிகிறது. ஆல்வின் தேவைப்படும்போது, பொன்னுசாமியிடம் ரசீதை காண்பித்து, நகைகளை எடுத்து பின்பு மீண்டும் ‘லாக்கரில்’ வைத்துள்ளார்.

இந்த நிலையில் ஆசிரியை ஆல்வின், லாக்கரில் உள்ள நகையை எடுக்க தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்றார். அப்போது பொன்னுசாமி இல்லை. அவர், ஆடிட்டராக பதவி உயர்வு பெற்று வேறு கிளைக்கு சென்றுவிட்டதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர், ஆல்வினுக்கு சொந்தமான 101 பவுன் நகையை 10 பேரின் பெயரில் போலி ரசீது தயாரித்து, அடமானம் வைத்து மோசடி செய்ததும் தெரியவந்தது. நகையை மீட்க வேண்டுமானல் வட்டியுடன் சேர்த்து ரூ.29 லட்சம் தரும்படி ஆல்வினிடம் அங்கிருந்த ஊழியர்கள் கேட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை ஆல்வின், இதுபற்றி காசிமேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் பொன்னுசாமி உள்பட 2 பேர் மீது புகார் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story